Tuesday, September 12, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

இந்திய வரலாற்றில் பார்ப்பனியம்

மனித குல வரலாற்றில், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு சமூகக் கட்டமைப்பை இந்தியாவில் மட்டும்தான் காண முடிகிறது. ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிகக் காலகட்டத்தில் (கி.மு 3000), ஒரு சிறந்த நகர நாகரிகம் இருந்ததாக வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. ஆனால், நாடோடிக் கூட்டமாக வாழ்ந்த ஆரியர்களின் வருகைக்குப் பிறகான வேத காலத்தில் (கி.மு.1750) இந்தியாவின் சமூகக் கட்டமைப்பே தடம் மாறுகிறது. 

பிறப்பின் அடிப்படையில், மனிதர்களை நான்கு வருணங்களாகவும், வருணங்களைப் பல்வேறு சாதிகளாகவும் பிரித்து,  அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஒரு கொடுங்கோன்மை வடிவிலான சமூகக் கட்டமைப்பைப் பார்ப்பனர்கள் உருவாக்குகின்றனர். பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிராக மகாவீரரும், கௌதம புத்தரும் மக்களை மீட்டெடுத்து சமத்துவத்தை போதிக்கின்ற சமண மற்றும் பௌத்த நெறி வாழ்வியல் முறைகளைத் தோற்றுவிக்கின்றனர் (கி.மு.600).

பார்ப்பனியத்தின் பொற்காலம்

சமண-பௌத்த நெறிகளைப் பின்பற்றிய மௌரியர்களின் ஆட்சிக் காலம் வரை (கி.மு 322) சீராகச் சென்று கொண்டிருந்த இந்தியச் சமூகத்தில், புஷ்யமித்திரன் காலத்தில் (கி.மு 185) மீண்டும் பார்ப்பன மேலாதிக்கும் தலை தூக்குகிறது. குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (கி.பி 320-551) பார்ப்பனியம் உச்சத்தை தொடுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பன மேலாதிக்கத்தை நியாயப்படுத்துகின்ற பல்வேறு புராணங்களும், சாஸ்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான் குப்தர்களின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று புகழ்கின்றனர் பார்ப்பனர்கள். 

அதன் பிறகு, சாளுக்கியர்களின் ஆட்சி (கி.பி 600) சில காலம் இருந்தது. இதைத் தொடர்ந்து கஜினி முகமது (கி.பி 1002) படையெடுப்பு மற்றும் முகமது பின் துக்ளக் உள்ளிட்ட சுல்தான்களின் ஆட்சி (1306), இடையில் விஜயநகரப் பேரரசு (கி.பி 1336), பிறகு முகலாயர்கள் ஆட்சி (1527) என, இந்தியா, இஸ்லாமியர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி (கி.பி 1664) மற்றும் பேஷ்வாக்களின் (கி.பி 1657) ஆட்சிக்காலத்தில், அதிலும் குறிப்பாக பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில்தான் பார்ப்பனக் கொடுங்கோன்மை மீண்டும் உச்சத்தைத் தொட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவை தங்களது ஆளுகையின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் (கி.பி 1857) சில கொடூரமான பார்ப்பனிய நடைமுறைகளைத் தடை செய்தனர். 

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சி அதிகாரம் கை மாறிய பிறகு (கி.பி.1947), காங்கிரஸ் கட்சியும், இடையில் ஜனதா கட்சியும் ஆட்சியில் இருந்த போதும் பார்ப்பனிய மேலாதிக்கம் தொடரவே செய்தது. இன்று மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனிய மேலாதிக்கும் மீண்டும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு வரலாற்றில் பார்ப்பனியம்

கீழடி நாகரீகமே (கி.மு 600) தமிழ் நாட்டின் தொன்மையான நகர நாகரீகம் என்று சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோரின் சமகாலமாகக் கருதப்படும் தொல்காப்பிய காலகட்டத்தில் (கி.மு 711), தமிழ்நாட்டில் மற்கலி கோசாலர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஆசிவக நெறிமுறை தமிழ்நாட்டில் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனாலும், சங்க காலத்திலும், முற்கால மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலும் (கி.மு 600) பார்ப்பனிய மேலாதிக்கத்தின் தாக்கங்கள் தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இருப்பதைக் காண முடிகிறது.

ஆசீவகம்

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி 300-600) தலை தூக்கிய பார்ப்பனிய மேலாதிக்கம், சமண மற்றும் பௌத்த நெறிமுறைகளைப் பின்பற்றிய களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி 250-600) சற்றே மௌனித்து, பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம், பார்ப்பனர்களின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. 

சமண நெறிமுறைகளை வீழ்த்திவிட்டுத் தோன்றிய பக்தி இயக்கம் (கி.பி 600-1300), சைவம் மற்றும் வைணவம் என இருவேறு பிரிவுகளாக செயல்பட்ட காலத்தில், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம், திருப்புகழ் உள்ளிட்ட சைவ நெறி நூல்கள் நாயன்மார்களாலும், நாச்சியார் திருமொழி, திருப்பாவை உள்ளிட்ட வைணவ நூல்கள் ஆழ்வார்களாலும் இயற்றப்பட்டன. கம்பராமாயணம் இந்தக் காலகட்டத்தில்தான் படைக்கப்பட்டது. பார்ப்பனிய மேலாதிக்கத்தில் சில சீர்திருத்தங்கள் மட்டுமே இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்டன.

அதன் பிறகு, தமிழ்நாட்டில் சில இடங்கள் மராட்டியர்களின் ஆளுகையிலும், பல இடங்கள் நாயக்கர்கள் ஆளுகையிலும், இருந்த காலகட்டத்திலும், பார்ப்பனிய மேலாதிக்கும் தொடரவே செய்தது. பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகத் தோன்றிய நீதிக் கட்சி ஆட்சி காலத்தில், பார்ப்பனிய மேலாதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் தலைதூக்கும் பார்ப்பனிய மேலாதிக்கம்

தமிழ்நாட்டில், இராஜகோபாலாச்சாரி தலைமையிலான ஆட்சியின் போது தலை தூக்க முயன்ற பார்ப்பனியம், திராவிட இயக்கக் கருத்தியல் செல்வாக்கு அடைந்ததன் விளைவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி உருவான பிறகு, சற்றே அடக்கி வாசிக்கத் தொடங்கியது. நடிகை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில், பார்ப்பனியம் குதூகலிக்கத் தொடங்கியது.  தமிழ் நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபோதிலும், டெல்லியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடப்பதால், தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் இன்று கொக்கரித்து வருகின்றனர்.

பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர் காலத்தில் தொடங்கிய போராட்டம், இடையில் மராட்டியத்தில் மகாத்மா ஜோதிராவ் புலே, வடக்கே சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், கர்நாடகாவில் பசவண்ணா, கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் சித்தர்கள், அய்யா வைகுண்டர், வள்ளலார், தந்தை பெரியார் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும், பார்ப்பனிய மேலாதிக்கம் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. 

மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்களின் கோட்பாடு, எப்படி மீதமுள்ள 97 சதவீத மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது? அதற்கான பின்னணி என்ன? உண்மையிலேயே அவர்களின் கோட்பாடு மக்களுக்கானதுதானா என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

1 comment:

  1. தமிழகத்தில் அயோத்திதாசர் பண்டிதரின் பார்ப்பனிய எதிர்ப்பை பதிவு செய்யாததில் இருந்து தருகிறது நீங்கள் யாரென்று

    ReplyDelete