மயக்கம் தரும் படிப்பினைகள்
2023, ஆகஸ்டு 29 அன்று சென்னைக்கு
ஒரு அவசர பயணம். இரவு போதிய தூக்கமில்லை. அலாரம் ஏமாற்றிவிட்டதால் காலை நான்கு மணிக்கு எழவேண்டிய நான்,
ஐந்து மணிக்கு எழுந்து அவசர அவசரமாகப் புறப்பட நேர்ந்தது. ஐந்தரை மணிக்கு
வாலாஜா டோல்கேட்டை அடைந்த போது லேசான தூரல். சென்னை செல்லும் பேருந்துகளில் உட்கார இடம் கிடைக்குமா
எனக் காத்திருந்து, கடைசியில் வேறு வழியின்றி நின்று கொண்டே பயணிக்க நேர்ந்தது.
முன்பக்க படிக்கட்டு அருகே கம்பியைப் பிடித்துக் கொண்டே ஒரு அரை மணி நேரம் பயணித்திருப்பேன். காஞ்சி மீனாட்சிக் கல்லூரியில் இருவர் இறங்குவார்கள் என்பதை அறிந்து, இடம் பிடிப்பதற்காகத்தான் படிக்கட்டு ஓரம் நின்று பயணித்தேன். சிறிது நேரத்தில் தாகம் எடுத்து, நா வறண்டு
விட்டது. மயக்கம் வரும் போலத் தோன்றியது. பேருந்தின் நடுவில்
கூட்டத்தோடு நின்றிருந்த எனது துணைவியாரிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என
நினைத்துக் கொண்டிருந்த போதே நான் பேருந்தின் மேல் படிக்கட்டில் விழுந்து
கிடந்தேன். அருகிலிருந்த இளைஞர் ஒருவர்தான், நான் பேருந்திலிருந்து கீழே விழாமல்
தடுத்து என்னைக் காப்பாற்றி உள்ளார். இல்லையேல் என் கதை
அன்றே முடிந்திருக்கும்.
வெறித்து நிற்கும் பறக்கும் சாலை
பூந்தமல்லியில் ஒருசிலர் இறங்கிக் கொள்ள, மதுரவாயல் வழியாக கோயம்பேட்டை நோக்கிப் பயணித்தபோது, சாலையின் நடுவே உள்ள பறக்கும் சாலைக்காக அமைக்கப்பட்ட ஓங்கி உயர்ந்து நிற்கும் மொட்டைத் தூண்கள் எண்ணற்ற கேள்விகளை என்னுள் எழுப்பின. மதுரவாயிலையும் துறைமுகத்தையும் இணைப்பதற்கான பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் 2009 ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு அதற்காக எழுப்பப்பட்ட தூண்கள்தான் இவை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் வாகனங்களைச் சுமக்க வேண்டிய இந்தத் தூண்கள், இசைக் கச்சேரி விளம்பரங்கள், தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட சுவரொட்டிகளை மட்டுமே சுமந்து வருகின்றன.
இது கலைஞர் மூளையில் உதித்தத் திட்டம் என்பதால், அடுத்து 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அன்றே உலவினாலும், அது கூவம் நதிநீர் ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் கைவிடப்பட்டதாக அதிமுக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 இல் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்தது.
மிகக்குறுகிய காலத்திலேயே துருப்பிடித்து இத்தும் போகும் தன்மை கொண்டவை இரும்புக் கம்பிகள். துருப்பிடித்தல் என்பது சேன்சரைப் போன்றது. ஒருமுறை துருப்பிடித்து விட்டால் அது மொத்தத்தையும் அரித்துக் தின்றுவிடும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக கடும் மழையிலும், பனியிலும், வெயிலிலும் தூண்களுக்கு மேலே துருத்திக் கொண்டிருக்கும் இரும்புக் கம்பிகளை அப்படியே பயன்படுத்தினால் என்னவாகும் என்பதுதான் எனது கேள்வி.
ஆனால், எனது கேள்விக்கு இனி இங்கே இடமில்லை. ஏற்கனவே 15% வேலைகள் முடிவடைந்து சுமார் ரூ.270 கோடியை விழுங்கிய இத்திட்டம் முற்றிலுமாக புதிய வகையில் ரூ.5855 கோடி மதிப்பில், இரண்டு அடுக்கு பறக்கும் சாலையாக மாற்றி அமைக்கப்படவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து, மதுரை எய்ம்ஸ் ஒற்றைக்கல் புகழ் மோடி அவர்களால் கடந்த ஆண்டு, மே 16 இல் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது.
புதிய பாதை அமைக்கும் போது, பழையத் தூண்களை அப்படியே விடப்போகிறார்களா அல்லது அகற்றப் போகிறார்களா? அப்படியே விட்டால் போக்குவரத்துக்கு இடையூறு; அதனால் அகற்றுவதைத்தவிர வேறு வழி இல்லை. பழைய திட்டத்தை முடக்கியதால் ஏற்பட்ட இந்த மொத்த இழப்பிற்கும், சனாதனப் பேர்வழி, செத்தும் கெடுத்த சீதக்காதி சென்டிமெண்ட் ஜெயலலிதாதானே காரணம்? இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என சிந்தனையில் ஆழ்ந்த போது, மதுரவாயில் சாலையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட் சாலைக்குள் பேருந்து நுழைந்தது.
தியோடலைட்டுகளை மறந்த பொறியாளர்கள்
கோயம்பேடு மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலைய நிறுத்தத்தில் ஒரு சிலர் இறங்கிக் கொள்ள, முன்னோக்கிச் செல்ல பேருந்து திணறியது. முதல் நாள் பெய்த 4 செ.மீ மழைக்கே சாலையில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி, செல்லும் வாகனங்களால் அலை எழுப்பிக் கொண்டிருக்க, ஒரு ஐம்பது எருமை மாடுகள் மார்க்கெட்டுக்கு உள்ளே இருந்து மழைநீரில் தவழ்ந்து எதிரே வர, இதன் ஊடே பேருந்தை லாவகமாக நகர்த்திச் சென்றார் ஓட்டுநர்.
இது பெரு மழை அல்ல; மழை பெய்து பல மணி நேரம் ஆன பிறகும் நீர் வடிய வில்லையே? ஏன்? சாலை மற்றும் வடிகால் அமைப்பு அந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பொருள். இதற்கு பிரியாவை நொந்து கொள்வதா, இல்லை மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு தியோடலைட்டுகளைக் கையாளத் தெரியவில்லை என்று புரிந்து கொள்வதா?
தெருவில் சுற்றித் திரியும் பசுமாடு, ஒரு பச்சிளங் குழந்தையை மிகக் கொடூரமாக தாக்கியக் காட்சியை ஊடகங்களில் கண்டு மக்கள் பதறிய போதும் எருமை மாடுகள் எப்படி சென்னை நகரில் சுதந்திரமாக உலாவர முடிகிறது? சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. எருமைக் தோல் அதிகாரிகள் மாறாதவரை மாடுகளுக்குக் கொண்டாட்டம்; நமக்கோ திண்டாட்டம்தான்.
சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்
கோயம்பேடு பேருந்து நிலைய பின்பக்க நுழைவு வாயில் வழியாக நுழைந்து போது சாலையின் இருபுறங்களிலும் ஒவ்வொரு மரத்தடியின் கீழும் முளைத்திருந்த கண்ணாடிக் காடுகளைப் பார்க்கையில், இம்மரத்தடிகள் எல்லாம் முந்தைய இரவில் குடிமகன்களின் உல்லாசபுரிகளாக இருந்துள்ளன என்பதை உணர முடிந்தது.
தமிழ்நாட்டில் செயல்படும் போராளிக் குழுக்கள் வன்முறை எதிலும் ஈடுபடாத இன்றைய சூழலில், அவர்களைக் கண்காணிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட Q பிரிவு உளவுத்துறையினரை ஏவினாலாவது அவர்களுக்கும் வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும், கண்ணாடிக் காடுகள் விதைப்போரை கட்டுப்படுத்தின மாதிரியும் இருக்கும். செய்வார்களா? மாட்டார்கள்; காரணம், குடியே சட்டபூர்வமானபிறகு அதன் பின் விளைவுகள் மட்டும் சட்டவிரோதமாகிவிடுமா என்ன? வள்ளுவனுக்கு கோட்டங்களையும், சிலைகளையும் அமைத்து என்ன பயன்? அவன் சொல்லிச் சென்ற கல்லுண்ணாமையை உண்மையாகக்கினால் மட்டுமே அவனுக்கும் மரியாதை; ஆள்வோருக்கும் மரியாதை.
கண்ணாடிக் காடுகளைக் கடந்து சென்று பேருந்திலிருந்து இறங்கி கோயம்பேடு பேருந்து நிலைய முன்பதிவு ஆட்டோ மையத்தை அனுகினோம். காக்கிச் சட்டையில் அமர்ந்திருந்த ஒருவரிடம், நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி முன்பதிவு செய்யச் சொன்னபோது அவர் வெளியே வந்து ரூ.200 ஆகும் என்றார். அவர் ஆட்டோ ஓட்டுநர். வழக்கமாக ரூ.120 க்கு ரூ.200 கேட்டால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
ரூ.200 வாங்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஓகோவென்று வாழ்ந்துவிடப் போவதுமில்லை, ரூ.200 கொடுக்கும் அளவுக்கு பலரும் ஓகோவென்று வாழ்வதும் இல்லை. கடைசியில் ரூ.160 க்கு எமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசின் கட்டமைப்பு சிதையும் போது, அது ஆளும் அரசுக்கு எதிரான சீற்றமாக மாறும் என்பதைத்தான் முடங்கிப் போன முன்பதிவு மையங்கள் உணர்த்துகின்றன.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment