Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Monday, July 29, 2024

ஜோதிடம் உள்ளிட்ட புரோகிதத் தொழிலை ஏன் தடை செய்ய வேண்டும்?

சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆகப் பெரும்பான்மையான மக்கள் நம்பி வாழும் வேளாண்மையை, ஈனத்தொழில் என்று ஒதுக்கி வைத்துவிட்டு, வேதம் ஓதுவதை மட்டுமே தங்களுக்கானத் தொழிலாகத் தீர்மானித்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். வேதம் ஓதுவதால் மட்டுமே பெரிய அளவில் வருவாய் கிடைக்காது என்பதனால், புரோகிதம் மற்றும் ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை தமதாக்கிக் கொண்டனர்.
 
"தட்சணை, தானம் என்ற வகையில் அவர்களுக்குப் பொருள் குவிந்ததால், பொழுது போக்குவதில் நாட்டம் செலுத்துதல், களியாட்டங்களைக் காணுதல், சொகுசு படுக்கைகளில் உறங்குதல், கேவலமான கதைகளைச் சொல்லி அடுத்தவர்களோடு உரையாடுதல், அதன் மூலம் தங்களை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளுதல், இதையே ஆதாரமாகக் கொண்டு அடுத்தவர் மீது அதிகாரம் செலுத்துதல், ஆதாயத்திற்காக மந்திரத் தந்திரங்களில் ஈடுபடுதல், கைரேகை-சகுனம் பார்த்தல், மச்சங்களுக்கான பலன் சொல்லுதல், பில்லி-சூனியம் வைத்தல், பேய்-பிசாசு ஓட்டுதல், பாம்புக்கடி விஷ முறிவு மந்திரம் ஓதுதல், ஆயுள் ஜாதகம் கணித்தல், அதிர்ஷ்டக் குறி சொல்லுதல், இடி-மின்னல் வருவதை முன்னுரைத்தல், சந்திர-சூரிய கிரகணம் வருவதை கணித்தல், பெருமழை-பஞ்சம் வருவதை உரைத்தல், முகூர்த்தம்-முதலிரவு நாள் குறித்தல்கர்ப்பம் தரிக்க மந்திரம் ஓதுதல், கடன் பெற-செலவு செய்ய-உடன்படிக்கை மேற்கொள்ள நல்ல நாள்-நேரம் குறித்தல், தெய்வவாக்கு சொல்லுதல், நேர்த்திக்கடன் செய்தல், வீடு-மனை-நிலம் தேர்வு செய்தல், பூமி பூஜை-வேள்வி செய்தல், விலங்குகளைப் பலியிடும் சடங்கைச் செய்தல், பிரச்சனைகள் அதிகரிக்கும் பொழுது மனித உயிர்ப் பலியை செய்ய வைத்தல் உள்ளிட்ட இழிந்த கலைகளை தமதாக்கிக் கொண்டு, துட்டு, கோதுமை-அரிசி-ஆடு-பசு, காளைகளை தானமாகப் பெற்றுக் கொண்டு, தங்களது ஜீவனத்திற்காக மேற்கண்ட கீழான வழிகளையே பார்ப்பனர்கள் மேற்கொண்டனர்" என்பதை  அம்பேத்கர் பட்டியலிடுகிறார். (தொகுப்பு நூல்: தொகுதி-7).

இன்றைய நவீன காலத்திலும், ஒரு சில கலைகளை, அவர்கள் கைக்கொள்ளவில்லை என்றாலும், புரோகிதம்-ஜோதிடம் உள்ளிட்ட பெரும்பாலானவற்றை  மேற்கொள்வதன் மூலமாகத்தான் தங்களது ஜீவனத்தை பார்ப்பனர்கள் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். உழைக்காமலேயே காசு கொட்டும் கலையாக இவை இருப்பதால், பார்ப்பனர் அல்லாத மற்ற சிலரும் இன்று இத்தகைய ஈனத் தொழில்களில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது.
 
புரோகிதர்கள் கணித்தபடி நடக்கவில்லை என்றால், யாரும் நட்டஈடு கேட்டு எந்த பஞ்சாயத்தையும் கூட்ட முடியாது; நீதிமன்றங்களையும் நாட முடியாது. இதுதான் புரோகிதர்களின் பலமே!
 
"இந்தப் புரோகித முறை மதங்களைக் கடந்து பார்சிக்கள் உள்ளிட்ட பலரிடமும் பரவி உள்ளதையும் நாம் காண முடிகிறது.
 
சமூகத்தில் உயர்ந்தவர்களாக புரோகிதர்கள் தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.

பிறப்பு-திருமணம் என மகிழ்ச்சிக்கான சடங்குகள், பிறகு தந்தை-இறுதியில் மரணம், தெய்வங்களுக்குப் படையல்,  அதைத் தொடர்ந்து நீண்டகால துக்கம் என வாழ்க்கை நெடுகிலும்,  ஒரு தீய நுண்ணறிவாளனைப் போன்று புரோகிதன், மனிதனை நிழல் போலத் தொடர்வதால், அவன் எங்கும் நீக்கமற 
நிறைந்திருக்கிறான்.

சாஸ்திரங்களை மீறுதல் பயங்கரமான தண்டனைக்குரியதாக மக்களை நம்ப வைத்திருக்கிறான். 99% மக்கள் இதற்குப் பலியாகி உள்ளனர். காண முடியாத சக்திக்கும், திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு சாத்தானைப் போல, புல்லுருவியாக, தரகனாக இருந்து கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டுகிறான்.
 
மூடநம்பிக்கைகளுக்கு
ஆதரவாக புரோகிதன் இருப்பதால்மகிச்சிகரமான திருமணமானாலும், துக்ககரமான மரணமானாலும் இரண்டு சம்பவங்களையும் புரோகிதன் சமநோக்கில்தான் பார்க்கிறான்

புரோகிதம் நாகரிகத்திற்கு ஒரு முட்டுக்கட்டை; எனவே, புரோகிதத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டிய அதே வேளையில், புரோகிதத் தொழிலை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதையும் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். புரோகிதத்தில் தீமைகளே மலிந்து கிடப்பதால் அதை உடனடியாக ஒழித்துக் கட்ட வேண்டும்; ஒத்தி போடக்கூடாது" என்கிறார்.
 
"ஒரு அலுமினிய டம்ளர் கூட வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு ஆண் இறந்த பிறகு, இறப்புச் சடங்குகளைச் செய்வதற்கு, ஒரு வெள்ளிக் கிண்ணம் வேண்டும் என்று புரோகிதன் வலியுறுத்துகிறான்; ஒரு மனிதன் செத்த பிறகும் செலவு வைக்கும் இந்த இழிந்த புரோகிதத் தொழிலை துடைத்தெறிய வேண்டும்; அதற்கான வீரமிக்கப் பணியில் அறிவாளிகளும், படித்த இந்துக்களும், முகமதியர்களும், கிருத்தவர்களும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைக்கிறார் அம்பேத்கர்.
(தொகுப்பு நூல்: தொகுதி-36).

என்றோ ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டிய புரோகிதத் தொழில், மேலும் மேலும் பலமடைந்தே வருகிறது. துன்ப துயரங்கள் நிறைந்த இச்சமூகக் கட்டமைப்புதான் இதற்குக் காரணம் என்றாலும், நாம் அதை உணர்வதற்கே ஜோதிடமும் புரோகிதத் தொழிலும் தடையாக இருப்பதால் இவற்றை தடை செய்வதைத்தவிர‌ வேறுவழி ஏதுமில்லை.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

 whatsapp குழுவில் நண்பர்களின் கருத்துக்கள்:

முருகன்: இவன் இதை தடை செய்வானா மக்கள் புரிந்து கொண்டு அவர்களின் இடது காலால் தட்டிவிட வேண்டும் தினமணி தினதநதி போன்ற தினசரி நாளோடு களிலியே வெளியிட வேண்டிய ஒரு நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் தோழர். இவன் முருகன்கு.

செல்வம்: இன்று அவாக்களின் ஆட்சி நடைபெறுகிறது, தடை செய்யமுடியாது,😭😭😭

 

Thursday, July 4, 2024

குசுவிட ஏற்ற நேரம் எது?

வாழ்க்கைத் துணை தேட-கல்யாணம்-முதலிரவு, 

குழந்தை பிறக்க-தொட்டிலில் போட-பெயர் சூட்ட, பள்ளியில் சேர்க்க-படிக்க-பணியில் சேர, 

நிலம்-மனை வாங்க, உழவு செய்ய-பூமி பூஜை போட, கடன் வாங்க-தொழில் தொடங்க-கடை திறக்க, வாகனம் வாங்க-ஓட்ட,

சாவு-பிணம் தூக்க-கருமாதி-திதி கொடுக்க, 

வீட்டை விட்டு வெளியே போக-வர 

என  எதற்கெடுத்தாலும்
நல்ல நாள்-கெட்ட நாள், வளர்பிறை-தேய்பிறை, ராகு காலம்-எமகண்டம்-குளிகை முதலாக ஜாதகம் மற்றும் கால நேரம் பார்ப்பது அதிகரித்து விட்டது.


மூக்குச் சளி சிந்த-மூத்திரம் பெய்ய-பிய் பேள என இவற்றிற்கும் கால நேரம் பார்க்கும் காலம் நெருங்குகிறதோ என அஞ்சும் வகையில் மக்களிடையே மூடநம்பிக்கைகள் மண்டிக் கிடக்கின்றன. 

அறிவு எனும் பயிர்கள் வளர வேண்டிய மனம் (mind-a product of brain) எனும் மண்ணில் களைகளே மண்டிக் கிடந்தால் என்ன கிடைக்கும், குப்பையைக் தவிர?

பழைய பஞ்சாங்கங்களே தேவலாம் என்கிற அளவுக்குப் புதிய பஞ்சாங்கங்கள் பல்கிப் பெருகி விட்டன. அறியாமை நம்மை ஆட்கொண்ட பிறகு அறிவியல் வளர்ந்து என்ன பயன்? 

குசு விடுவதற்கு இடம் பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கு. இல்லையேல் மானம் கப்பல் ஏறி விடும். ஆனால் இனி இதற்கும் நல்ல நேரம் பார்ப்பேன் என அடம் பிடித்தால், நீ நாறிப் போவதை யாரால்தான் தடுக்க முடியும். 

இதற்கெல்லாம் யாரை நொந்து கொள்ள? இவற்றையெல்லாம் ஒரு தொழிலாக உருவாக்கி, 
தனது வருவாய்க்கு வழி வகுத்து, 
அதை இன்றும் தொடர்கின்ற பார்ப்பனக் கூட்டத்தையா? 
அல்லது 
கண்டம் விட்டு கண்டம் தாவி, 
மண் எடுக்கும் அறிவை வளர்த்துக் கொண்ட பிறகும், 
நான் மண்ணாங்கட்டியாய்தான் இருப்பேன் என்று 
பார்ப்பனர்களின் கட்டுக்குள் சிக்குண்டு கிடக்கும்  நம்மவர்களையா? 

மது போதை மற்றும் மத போதையை விஞ்சும் இந்த ஜாதக போதையை ஒழிக்க ஏதேனும் வழி உண்டா? 

சமூக நீதிக் கொள்கையில் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை பின்பற்றும் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசே! 
எது வரினும் வரட்டும்! 
தயவு தாட்சண்யம் பாராமல் ஜாதகம் ஜோதிடம் உள்ளிட்ட அனைத்து வகையான பஞ்சாங்க நடைமுறைகளையும் சிறப்புச் சட்டம் மூலமாக உடனடியாக தடை செய்!    இல்லையேல் தமிழ்நாடு ஹத்ரஸ்களாக மாறுவதற்கு நீண்டகாலம் ஆகாது!

ஊரான்

Sunday, June 9, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி


பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாடகர்களை பிறவிப் பாடகர்கள் என்று சொல்வதை நாம் கேள்விப்படத்தானே செய்கிறோம். அவ்வாறு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பயிற்சியின் மூலம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும், குரல் வளம் சரியாக அமையவில்லை என்றால் ஒரு சிலரின் பாடல்கள் நம்மை ஈர்ப்பதில்லை. இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்தாலும் ஒருவர் சிறந்த பாடகர் ஆகிவிட முடியாது. அதற்கு இசை நுணுக்கங்கள் குறித்த அறிவும், பயிற்சியும் தேவை. ஒரு சிலரின் குரல் வளம் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பிறவியிலேயே அவர்களுக்கு அமைந்திருக்கும் குரல்வளை அதிர்வு நாளங்கள்தான் (vocal chord).

குரல்வளை அதிர்வு நாளங்கள் சரியாக அமையாததால்தான் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போன்ற குரல் அமைப்பையும், ஒரு சில பெண்கள் ஆண்களைப் போன்ற குரல் அமைப்பையும் கொண்டிருக்கின்றனர். பெண்களின் குரல் மெண்மையானதாகவும், ஆண்களின் குரல் தடிமனானதாகவும் நமக்கு பதிவாகிவிட்டதால்தான் மாறுபட்ட குரல் அமைப்பைக் கொண்டோரை நாம் பரிகாசத்தோடு பார்க்கிறோம். பெண்களின் குரல் அமைப்பு ஆண்களிடமும், ஆண்களின் குரல் அமைப்பு பெண்களிடமும் இருந்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டுதான் இருப்போம்.

இப்படி பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு அம்சங்களை உடல் கட்டமைவு சார்ந்த கூறுகளாகக் கொள்ளலாம். இவைகள் சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக அமைகின்ற அம்சங்களாகும்.

சாதி - மதம் சார்ந்த அடையாளங்களும் பண்புகளும்

ஒரு மனிதன் தனது வளர்ச்சிப் போக்கில் சாதி – மதம் உள்ளிட்டு தான் சந்திக்கின்ற பல்வேறு விசயங்கள் குறித்து, பல்வேறு விதமான பண்புக் கூறுகளை தனதாக்கிக் கொள்கிறான். அதற்கேற்றவாறு சில புறத் தோற்ற அடையாளங்களையும் ஒருவன் ஏற்படுத்திக் கொள்கிறான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார் புடவை போற்ற அடையாளங்கள் ஐயர் – ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களின் அடையாளங்களாகவும்; இடப்புற சேலை மாராப்பு இடையர் குலப் பெண்களின் அடையாளமாகவும் இன்றளவும் நீடிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் ஒருவன் தான் சார்ந்திருக்கின்ற சாதி மற்றும் மதத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. அவன் தன்னை இவ்வாறு அமையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் மனநிலையையும் வளர்த்துக் கொள்கிறான்.

இந்து மத ஆண்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதும் பெண்கள் பூவும், பொட்டும், தாலியுமாக இருப்பதும் இந்து மத அடையாளங்களாக தொடர்கின்றன. இதில் ஆண்கள் முன்ன – பின்ன இருந்தாலும் பெண்களின் அடையாளங்கள் அவசியம் என அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இவற்றை மீறுவது பெண்மைக்கு அழகல்ல என்கிற மனநிலைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தான் பழகுகிற மனிதர்கள், படிக்கிற நூல்கள், பார்க்கிற சம்பவங்கள் மூலம் பெறக்கூடிய கருத்துக்களை சுயபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு சிலர் சாதி – மத வட்டத்திற்கு புறம்பான அல்லது நேர் எதிரான சில பண்புகளை வளர்த்துக் கொள்வதும் உண்டு. இத்தகையவர்களே பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக அறியப்படுகிறார்கள். மற்றபடி ஆகப் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கிற சாதி மற்றும் மத வட்டத்திற்கு ஏற்புடைய பண்புகளையே கொண்டிருக்கின்றனர்.

மனம் சார்ந்த தனி மனிதப் பண்புகள்

மேலும் ஒவ்வொருவனும் சுயேச்சையான சில தனி மனிதப் பண்புகளையும் கொண்டிருக்கிறான்.இவைதான் ஒருவனை மற்றவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன.

சாதி - மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றுபட்டிருக்கும் அதே வேளையில் தனிமனிதப் பண்புகளில் வேறுபட்டே காணப்படுகின்றனர்.

சமூகத்தில் நிலவும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், ஈடுபடும் தொழிலுக்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிமனிதனும் சில தனி மனிதக் குணங்களை வளர்த்துக் கொள்கிறான்.

இது கோபக்காரர்கள் நிறைந்த உலகம். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு காட்டாமல் வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. இந்த வெறுப்பு தனி மனிதன் சார்ந்த வெறுப்பாகவோ அல்லது சாதிமதம்இனம்தேசம் சார்ந்த வெறுப்பாகவோ இருக்கிறது.

இருட்டில் இருக்கப் பயம், தனியாக இருக்கப் பயம், விலங்குகளைக் கண்டு பயம், பறவைகளைக் கண்டு பயம், மரணத்தைக் கண்டு பயம், நோயை நினைத்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் பயம், வேலையைக் கண்டு பயம் என பலர் பயபீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதிலும் நாட்டமின்றி வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவதும், சிடுசிடுப்பாக நடந்து கொள்வதும், எளிதில் சீற்றமடைவதும், முரட்டுத்தனமாய் இருப்பதும், பிறர் மீது பொறாமை கொள்வதுமாய் பலர் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

பக்திப் பரவசமாய் இருப்போரும், காமக் குரோதத்துடன் நடந்து கொள்வோரும் நம்மைச் சுற்றிதான் வாழ்கின்றனர்.

படு கஞ்சத்தனமும், சுயநலமும் நம்மைச் சுற்றிதான் உலவுகின்றன.

வாயடிப்போரும், பேசா மடந்தைகளும், நாணுவோரும், அழுமூஞ்சிகளும் நம் அக்கம் பக்கத்தில்தான் வாழ்கின்றனர்.

ஒருவன் தனது வாழ்க்கையின் போக்கில்தான் இத்தகைய மனம் சார்ந்த குணங்களை (mind symptoms) வளர்த்துக் கொள்கிறான்.

அதுபோலத்தான் காதல், வாடகை வீடு, கோவில் வழிபாடு, பொதுக்குழாய் – கிணற்று நீர் போன்றவற்றில் கடைபிடிக்கப்படும் சாதித் தீண்டாமை, உணவு – மொழித் தீண்டாமை, பூணூல் உள்ளிட்ட சாதி மத அடையாளங்களை அணிந்து கொள்வதிலும் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதிலும் பெருமிதமடைதல், அடக்கி ஆள வேண்டும் என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான ஆதிக்க மனநிலை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் மீதான காழ்ப்புணர்ச்சி, ஜாதகம் – ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை, சடங்குகள் – சம்பிரதாயங்களை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பார்ப்பனிய பண்புகளையும், குணங்களையும் ஒருவன் வளர்த்துக் கொள்கிறான்.

எனது பார்ப்பனத் தோழி ஐந்து வயதிலிலேயே மாமியானது இப்படித்தான்? அவள் முதல் வகுப்பைத் தாண்டும் போதே பார்ப்பனியத்தை கைப்பற்றிக் கொள்கிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சாதியைச் சார்ந்த மற்றும் மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் அந்தந்த சாதி, மதத்திற்கான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். சாதிகளும், மதங்களும் நிறுவனங்களாய் அதாவது அமைப்புகளாய் இருப்பதனால் அத்தகைய அமைப்புகளுக்குள் ஒருவர் இருக்கும் வரை அதன் பண்புகளையும் குணங்களையும்தான் கொண்டிருக்க முடியும்.

எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்ற போதுஅடியேய்! எங்கள பார்க்க வருவீயாடி?” என எனது துணைவியார் கேட்ட போதுஎங்க மாமா வீட்டுக்கு எப்பவாவது வருவோம். அப்படி வரும்போது நேரம் கெடச்சா, ஆண்ட்டி! உங்கள மட்டும்தான் வந்து பார்ப்பேன். இந்த அங்க்கிள கண்டிப்பா பார்க்க மாட்டேன்என்று சொன்னவள் மீண்டும் வருவாள்; அவள் மடிசார் மாமியானது பற்றி புரிய வைக்க!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

முற்றும்.
நன்றி!
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Friday, May 17, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 8


நால் வர்ண சாதிய அமைப்பு முறை, அதில் உயர்ந்த சாதி - கீழான சாதி என்கிற சாதியப் படிநிலை, அச்சாதி படிநிலைக்கேற்ப சாதியத் தீண்டாமை, உணவுத் தீண்டாமை, மொழித் தீண்டாமை, மக்களை மடமையில் ஆழ்த்தும் ஜாதகம் – ஜோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை உள்ளடக்கியதுதான் பார்ப்பனியம் என முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

வர்ணாசிரமக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கினாலோ, சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசினாலோ, சாதியத் தீண்டாமை - உணவுத் தீண்டாமை - மொழித் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமைகளுக்கு எதிராக போராடினாலோ இவை எல்லாம் இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்து போராடுபவர்களை இந்து மத விரோதிகள் என முத்திரை குத்துவது பார்ப்பனியத்தின் நடைமுறை. பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் போது, அடக்கு முறை மற்றும் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாகவும், பொய் – புனைசுருட்டு - நயவஞ்சகம் - சூழ்ச்சிகள் மூலமாகவும், நீதி மன்றம் மற்றும் அரசுகளின் துணையோடும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பார்ப்பனர்கள் எப்போதுமே முயற்சித்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகளின் மூலமாகத்தான் பார்ப்பனியம் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.

மிகச் சாதாரண மக்களைக்கூட தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்து மதக் கடவுளர்களையும் – நம்பிக்கைகளையும் இணைத்து பல்வேறு கட்டுத் கதைகளை அவ்வப் பொழுது அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கான சமீபத்திய எடுப்பான உதாரணம்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்கான ‘இராமர் பாலம்’ என்கிற கட்டுக் கதை.

பார்ப்பனியத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வாலி வதத்திலும், ஏகலைவன் கட்டை விரலிலும் நாம் தேட வேண்டியதில்லை; சு.சாமி - சோ.சாமி போன்றோரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்!

பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் பார்ப்பனர்களுக்கு கௌதம புத்தரைப் பிடிக்காது; அம்பேத்கரைப் பிடிக்காது; பெரியாரைப் பிடிக்காது; மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களைப் பிடிக்காது; தமிழர்கள் தங்களுக்கான மொழி - பண்பாட்டு உரிமைகள் பற்றிப் பேசினால் பிடிக்காது; கோவில் கருவறையில் தமிழ் நுழைவது பிடிக்காது; அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பிடிக்காது; சமூகரீதியாக இழிவுபடுத்தப்பட்டு, கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கட்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தருவது பிடிக்காது; பொதுவுடமைச் சமுதாயம் கோரும் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. மொத்தத்தில் பார்ப்பனியத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குப் பிடிக்காது. காரணம் மேற்கண்டவை அனைத்தும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி பலவீனப்படுத்தக் கூடியவை; வீழ்த்தக் கூடியவை.

மக்களுக்கான சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகிய அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடுகளை நால் வர்ணக் கோட்பாடுகள் மறுக்கின்றன. பார்ப்பனியத்தின் நால் வர்ணக் கோட்பாடுகளும் இந்து மதக் கோட்பாடுகளும் வேறு வேறானவை அல்ல என்பதால்தான் இந்து மதத்தை பார்ப்பன சனாதன மதம் என்றே பெரியாரும், அம்பேத்கரும் வரையறுக்கின்றனர்.

விதிவிலக்காக ஒரு சில பார்ப்பனர்களைத் தவிர பெரும்பாலான பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்ப்பனர்களாய்ப் பிறந்ததனாலா? அல்லது பார்ப்பனியக் கருத்துகளில் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதனாலா? அதே போல பிற சாதியினர் பலரும் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம்?

பார்ப்பனர்களைப் பற்றி மட்டுமல்ல ஒவ்வொரு சாதியினரைப் பற்றியும் அச்சாதிக்கே உரிய குணமாக சில குணங்களை அடையாளப்படுத்தி அச்சாதியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற கருத்து மக்களிடையே பரலமாக நிலை பெற்றிருக்கிறது. ஒருவரின் ஒரு குறிப்பிட்ட குணத்தை வைத்து அவர் அச்சாதியைச் சார்ந்தவர், அதனால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என பிறர் கூறுவதை இன்றளவும் நாம் கேட்க முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் அச்சாதியில் அவர் பிறந்ததனால்தான் அவர் அத்தகைய குணங்களைக் கொண்டுள்ளார் என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது. இவ்வாறு பார்ப்பதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைகின்றன? எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் வளர்ப்பின் அடிப்படையில் வளர்கின்றன? இவற்றில் மாறுதலுக்குள்ளாகும் குணங்கள் - அடையாளங்கள் எவை?

தொடரும்......





பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


Tuesday, December 21, 2010

" ஐயர்" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?


அன்புள்ள வலைப்பூ வாசகர்களே!

25.11.2010 அன்று "வினவு" தளத்தில் வெளியான எனது படைப்பு இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.

ஊரான்.

---------------------------------------------------------------------------------------------

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களை வெள்ளி மணியில் பார்க்க முடியும். 'மக்கள் மகிழ்ச்சி' என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். ...... மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.... ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு.....அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு.....களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ....”

“உங்கள் மகனுக்கு.....அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்....”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி 'காலம் உங்கள் கையில்' பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடில்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் 'அட்ஜஸ்ட்' செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில் சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, 'அவ சரியல்லை', 'அவளோட அம்மா சரியில்லை', இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் 'முன்ன பின்ன' இருந்தாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

ஊரான்.