Showing posts with label நாயுடு. Show all posts
Showing posts with label நாயுடு. Show all posts

Saturday, August 17, 2024

தீண்டாமைக்கு தூபம் போடும் "காளியாத்தா" மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா?

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், ஜெம்மன் குப்பம் கிராமத்தில் உள்ள  வன்னியர்கள், யாதவர்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து காளியாத்தா கோவிலை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலில் உள்ள ஆத்தாளை, கிராமத்தில் சரிபாதியாக உள்ள பட்டியல் சாதி மக்களும் இதுவரை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், மெல்ல மெல்ல சாதி இந்துக்களால் பட்டியல்  சாதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததோடு, இந்த ஆண்டு ஆடி மாத திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என ஒரு பூசாரியின் கனவிலே வந்து ஆத்தா சொன்னாளாம். அதையே சாதி இந்துக்களும் அப்படியே ஏற்றுக் கொண்டார்களாம். அதனால், இந்த ஆண்டு ஆடி திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். கோவிலை இடிக்கச் சொல்லி எந்த ஆத்தா யாருடைய கனவில் வந்து சொன்னாள் என்று தெரியவில்லை.

இதற்கு எதிராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் காவல்துறையில் புகார் கொடுக்க, அந்தப் பூசாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள் கோவிலையே இடித்துத் தள்ளி இருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள நாலு சாதிக்காரர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இடையேயும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஆனாலும் அவர்களுக்கிடையே தீண்டாமை கிடையாது. 

பட்டியல் சாதி மக்களும் இந்துக்கள்தான். அவர்களும் இந்து கடவுள்களைத்தான் வணங்குகிறார்கள் என்றாலும் கூட அவர்களை சாதி இந்துக்கள் உடன் சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான், தீண்டாமை. 

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டம் எழுதி 78 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  அன்று, தொட்டால் தீட்டு என்றார்கள். இன்றோ உடன் வந்தாலே தீட்டு என்கிறார்கள். இப்படி தீண்டாமை என்பது நவீன வடிவில் அரங்கேறி வருகிறது.

கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் தனிமனித விவகாரமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும். பொது வெளியில் வரக்கூடாது.

கோவில்கள் தீண்டாமையின் மையமாக விளங்குவதாலும், புறம்போக்கு நிலங்களையும் காடுகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாலும் கோவில்கள் அனைத்தையும் இடித்துத் தரை மட்டமாக்க வேண்டும். எங்கெல்லாம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வெளியில் கோவில்கள் கட்டப்படுவதால் குறிப்பாக காடுகளையும் ஆறுகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. 

பொது இடங்களை தனிநபர்கள் ஆக்கிரப்பு செய்தால் சட்டவிரோதம்; அதையே கடவுளின் பெயரால் செய்தால் அங்கீகாரமா? சட்டத்தின் முன்னால் கடவுளும் ஒரு நபர்தானே? அந்தக் கடவுளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்சுகிறது அரசும் நீதிமன்றங்களும்?

ஊரான்

Wednesday, September 13, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

இடைநிலைச் சாதிகளின் தோற்றம்

கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம்  குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 

பிராமணர்கள்

ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, உபாத்யாயா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக பார்ப்பனர்கள் இருந்தாலும், அவர்கள் இன்றுவரை பிரம்மா எப்படிப் படைத்தானோ அப்படியே, பிராமண வருணமாகத் தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி 10) 

வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு அமைந்திருந்த ஆரியவர்த்த தேசத்தில், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சனாதன தருமம் (மனு 2: 21, 22).

சத்திரியர்கள் சூத்திரர்களாக ஆன கதை

பார்ப்பன மேலாதிக்கம் நாலாதிசைகளிலும் விரிவடைய முயன்ற போது, பிராமணர்களை வணங்காததாலும், பூணூல் அணிவதைப் புறந்தள்ளியதாலும் சுற்றியிருந்த பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகிய பண்ணிரெண்டு நாடுகளைச் சேர்ந்த சத்திரியர்கள் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள் (மனு 10: 43, 44). 

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிடப் பகுதிகளில் ஆட்சி செலுத்திய அனைத்து சத்திரிய மன்னர்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர். அது மட்டுமன்றி, சனாதனத்தை ஏற்க மறுத்த வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சியை இழந்து அழிந்து போனார்கள் (மனு 7: 41)

மேலும், நான்கு யுகங்களில், முதல் மூன்று யுகங்களான திருத, திரேதா, துவாபரா யுகங்களில் நான்கு வருணங்களும் இருந்தன. கி.மு 3102 இல் தொடங்கியதாக பார்ப்பனர்களால்  நம்பப்படும் கலியுகத்தில், கேடுகள் நிறைந்து விட்டதால், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என பார்ப்பனர்கள் உறுதியாக இன்றுவரை நம்புகின்னர். எனவே, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும், இன்று பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது. (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி-8, பக்கம் - 441). 

இடைநிலைச் சாதிகள்

தமிழ்நாட்டில் ஆசீவகம் காலம் தொடங்கி சங்ககாலம் வரையிலும் நான்கு வருணங்கள் கிடையாது. மாறாக இனக்குழுக்களை வழிநடத்திய தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியத் தலைவர்கள் பேரரசர்களாகவும் செயல்பட்டிருக்கக்கூடும். சனாதனத்தை ஏற்க மறுத்த இவர்கள் அனைவரும் சூத்திரர்களாக தரம் இறக்கப்பட்டு, இவர்களின் இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது. 

இத்தகைய இனக்குழுக்களின் பிரிவினர்தான் இன்று வேளாளர்களாகவும் (பிள்ளை), முதலியார்களாகவும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களாகவும், நாயுடு-ரெட்டிகளாகவும், வன்னியர்களாகவும், முத்தரையர்களாகவும், கள்ளர் - மறவர் - அகமுடையர் உள்ளிட்ட‌ முக்குலத்து தேவர்களாகவும் அறியப்படுகின்றனர். இதில் நாடார் சாதி அடங்குமா என்ற கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். இது குறித்து தீண்டாமை என்ற தலைப்பில் பார்ப்போம்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும், அதற்கு அடுத்த காலத்திலும், மேற்கண்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்ததால் "நாங்கள் ஆண்ட பரம்பரை" என்று உரிமை கோரி, தங்களைச் சத்திரியர்களாகக் காட்டிக் கொள்ள இன்று இவர்கள் முயல்கின்றனர். அதற்காக, கற்பனையான தளபுராணங்களை ஏற்கனவே ஒரு சிலர் உருவாக்கிக் கொண்டதோடு, இன்று வரலாற்றையும் புதிதாக திருத்தி எழுத முயல்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் சிற்றரசர்களாக இருந்திருந்தாலும், சனாதன தருமப்படி அவர்களும் சூத்திரர்களே; எனவே, அவர்களின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் இடைநிலைச் சாதியினரின் சந்ததியினரும் சூத்திரர்களே. 

சாதியப் படிநிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சைவப்பிள்ளைமார்களே, இன்றைய பார்ப்பனர்களின் சனாதன தருமப்படி சூத்திரவாளாகக் கருதப்படும் போது, படிநிலையில் அதற்கும் கீழே உள்ள வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதியினர் எம்மாத்திரம்? இவர்கள் எல்லாம் வெறும் ஜூஜூபி!

அடுத்து தீண்டாமை குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

Saturday, May 4, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


சென்னை முதல் கன்யாகுமரி வரை வாழும் தமிழனின் பொது அடையாளம் தமிழ் மொழி. ஆனாலும் அவனுக்கு சென்னைத் தமிழன், கொங்குத் தமிழன், நெல்லைத் தமிழன் என்கிற வட்டார அடையாளங்களும் உண்டு. சென்னைத் தமிழைக் கேவலமானதாகக் கருதி கிண்டல் செய்யும் கொங்குத் தமிழன் சென்னைக்கு வந்து வாழத் தொடங்கியதும் அவனிடம் சென்னைத் தமிழ் ஒட்டிக் கொள்கிறது. சென்னைக்காரன் நெல்லைக்குச் சென்றால் அவன் நெல்லைத் தமிழனாகி விடுகிறான். இவை எல்லாம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட அடையாளங்கள். பேசும் மொழி அடையாளம் ஒன்றைத்தவிர வேறு ஒன்றுபட்ட பொது அடையாளம் எதுவும் தமிழனிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அது போல இந்தியனை அடையாளப் படுத்தும் பொது அடையாளம் ஏதும் இருக்கிறதா? நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அப்படி பொது அடையாளம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பொது அடையாளம் எதுவும் இல்லாதது மட்டுமல்ல இந்தியர்கள் சாதி-மத-இன-பிராந்திய-மாநில-மொழி ரீதியாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனக்கூறிக்கொண்டு பிய்ந்து கிடக்கும் இந்தியனை ஒட்டவைக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்தியனோ, தமிழனோ அவன் வேற்றுமையிலும் ஒன்றுபட்டு நிற்பது இரண்டு விசயங்களில்த்தான். ஒன்று லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் சொத்தைச் சூறையாடுவது; இரண்டாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது. மற்ற விசயங்களில் இவன் எப்படி எல்லாம் வேறுபடுகிறான் என்பதைப் பார்ப்போம்.

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தழிழையே அன்றாடம் பேசினாலும் தமிழ் நாட்டுக் கோவில்களில் தமிழில் பூசை செய்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைந்து உள்ளே சென்று ஆண்டவனை வழிபடுவது பார்ப்பனர் உள்ளிட்டு பிற சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு அதிசயம் ஏதும் நடந்து விட்டால் ஒரு பறையன் கருவறைக்குள் சென்று பூசை செய்வது பிற்பட்ட சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது. அப்பொழுது இவர்கள் ஒட்டு மொத்தமாக நாத்திகர்களாக மாறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, ஓ.பி.சி இவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களைவிட இவர்கள் முன்னேறுவதை பார்ப்பனர்களால் பொருத்துக் கொள்ள முடியாது.

இட ஒதுக்கீடு கிடைக்காத பார்ப்பனரல்லாத பிற உயர் சாதிக்காரனுக்கு ஓ.பி.சி க்காரன் முன்னேறுவதைப் பொருத்துக் கொள்ள முடியாது. எம்.பி.சி க்காரன் முன்னேறுவதை பி.சி க்காரனால் பொருத்தக் கொள்ள முடியாது. எளிமையாகச் சொன்னால் எம்.பி.சி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு வன்னியன் முன்னேறினால் ஒரு முதலியாருக்குப் பிடிக்காது. பறையர்-பள்ளர்-அருந்ததியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதை ஓ.பி.சி – பி.சி – எம்பி.சி க்காரர்களால் பொருத்துக் கொள்ள முடியாது. தனி இட ஒதுக்கீடு மூலம் அருந்ததியர் முன்னேறுவதை பள்ளர் - பறையர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.

இஸ்லாமியனுக்கோ, தாழ்த்தப்பட்ட கிருஸ்தவனுக்கோ இட ஒதுக்கீடு கொடுப்பது இந்துக்களுக்குப் பிடிக்காது.

பார்ப்பனப் பெண்ணை பிற சாதிக்காரன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணை ஒரு முத்தரையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வெள்ளாளக் கவுண்டர்களுக்குப் பிடிக்காது. நாயுடுப் பெண்ணை ஒரு தேவன் காதலித்து திருமணம் செய்து கொள்வது நாயுடுகளுக்குப் பிடிக்காது. வன்னியப் பெண்ணை ஒரு பறையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வன்னியர்களுக்குப் பிடிக்காது. பள்ளர் பெண்ணை ஒரு சக்கிலியன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பள்ளர்களுக்குப் பிடிக்காது.

இப்படி அவரவருக்குப் பிடிக்காத அனைத்திலும் ஒளிந்திருப்பது தீண்டாமையைத் தவிர வேறெதுவுமில்லை. இத்தகைய தீண்டாமை பார்ப்பனர்களிடமிருந்தே தொடங்கி நடைமுறையில் இருப்பதால் இதைப் பார்ப்பனியம் என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.