Tuesday, December 10, 2024

பேசாத உறவுகளையும் பேச வைக்கும் மரணம்!

கடந்த ஞாயிறு காலை 5.13 மணிக்கு கைபேசி என்னை எழுப்பியது. எனது பாட்டி ஊரில் தங்கையின் மாமியாரும் தாய்மாமனின் இணையருமான அத்தை தனது மூச்சை நிறுத்திக் கொண்டதாக மறுமுனையில் செய்தி. காலை எட்டு மணிக்கு இணையரோடு புறப்பட்டேன்.

திருவண்ணாமலையைக் கடந்துதான் பாட்டி ஊருக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில் கலசபாக்கம் செய்யாற்றுப் பாலம். ஆற்றில் சுமாராய் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய போது மக்கள் கூட்டம் கூட்டமாய் வேடிக்கைப் பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் ஓடிய வெள்ள நீரின் தடயங்களைப் பார்த்தேன். அன்று தரைப்பாலம் மட்டுமே இருந்த ஒரு காலத்தில் பெருக்கெடுத்தோடிய பெருவெள்ளத்தை ஒப்பிடும் பொழுது இது ஒன்றும் அதிகமல்ல என்பதைத் தடயங்கள் உணர்த்தின.

வழக்கறிஞர் போஜகுமார்

திருவண்ணாமலைக்குள் நுழையும் பொழுது வேங்கிக்கால் ஏரியிலிருந்து கோடி வழியாக மிதமான நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஃபெஞ்சல் புயலின் போது மலையில் இருந்து பாறை உருண்டு மண்சரிவு ஏற்பட்டதைத் தவிர புயலின் வேறு தடயங்கள் எதையும் காண முடியவில்லை. 

"ஒரு ஆலமரத்தையோ, அரச மரத்தையோ பாத்தா அடியில் ஒரு கல்லை நட்டு ஆக்தாவாக்கி விடுகிறான். போற வழியில் ஒரு குன்றைப் பாத்தா ஒரு வேலைக் குத்தி குமரனாக்கி விடுகிறான்" என்பதற்கிணங்க வேங்கிகாலில் சாலையின் வலப் பக்கம் இரண்டு அரச மரங்களைப் பார்க்க முடிந்தது.  

கரையான்களின் தயவால் மரத்தடியில் புற்று ஒன்றும் வளர்ந்து விட்டால், அலங்கோலமாய் கொஞ்சம் மஞ்சளையும் குங்குமத்தையும் அதில் அப்பிவைத்தால் அறறிவு மனிதனும் அங்கே நெடுஞ்சாண்கிடைதான். 

விழுந்து எழுந்து நிமிர்ந்து பார்த்தால், சூலாயுதத்தோடு வெறித்துப் பார்க்கும் செவ்வாடை உண்டியல். யாசிப்பவனைக் கண்டு முடங்கும் கைகள் இங்கு மட்டும் யோசிக்காமலேயே உண்டியலை நோக்கித் தானாய் நீளும். 

இவனது காணிக்கையால் புற்றுகளெல்லாம் கோபுரங்களாய் மாறினாலும் இவன் மட்டும் இன்னமும் இடுப்புத் துண்டோடு பிரகாரங்களையும் மலைகளையும் சுற்றிக் கொண்டிருப்பான்.

ஒருபக்கம் அவிழ்த்துவிட்ட காளையைப் போல சீறிப்பாய்ந்த அணை நீரால் ஊறிப்போன தென்பெண்ணையாற்றின் கடைமடைகளில் நாற்றம் மூக்கைத் துளைக்க,  தண்டராம்பட்டு வழியாக சாத்தனூர் நோக்கிப் பயணித்த போது அணையின் வனப்பகுதிகளில் ஊற்றெடுத்து மெலிந்தோடிய நீரோடைகள் வாஞ்சையாய் வரவேற்றன.

வாழும் காலத்தில் கோடைகால வெக்கையிலிருந்து விடுபட ஓலை விசிறியில் களைப்பைப் போக்கியவர்கள், வாழ்க்கை எனும் புழுக்கத்திலிருந்து நிரந்தர ஓய்வை நாடும் பொழுது ஃபிரீசரின் உரைபனி அவர்களை இதமாய்ப் பார்த்துக் கொள்கிறது. 

ஃபிரீசருக்குள் அத்தையைப் பார்த்தேன். நினைவில் வாழும் தாத்தா பாட்டி தாய்மாமன் அத்தை ஆகியோரோடு பழகிய பள்ளிப் பருவ கோடை விடுமுறை நாட்களும், அந்த மண்ணில் நான் சுற்றித்திரிந்த பழைய காட்சிகளும் நினைவில் வந்து போயின.

உறவினர்களும் தெரிந்தவர்களும் வரத் தொடங்கினர். மாலையோடு வருவோரை பறையடித்து அழைத்து வந்து, பின்பு அவர்களிடமிருந்து பறையடிப்போர் பத்தும் இருபதும் பெறும் காட்சியைப் பார்த்த போது எனக்கு அழகிய பெரியவனின் வல்லிசைதான் நினைவுக்கு வந்தது. 

மரணம், இதுவரை பேசிக்கொண்டிருந்த சிலர் நிரந்தரமாகத் தங்களது பேச்சை நிறுத்திக் கொள்ளும் பொழுதுதான் அதுவரை பேசாதிருந்த சில உறவுகளையும் பேச வைக்கின்றனர். 

அத்தையும் சுடுகாட்டை நோக்கிப் பயணிக்க, வந்தவர்கள் பழையபடி அவரவர் வந்த திசை நோக்கிச் செல்ல, ஒரு மாத காலம் உடல் நலிவுற்றிருந்த நெருங்கிய நண்பரின் தாயார் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற மற்றுமொரு மரணச் செய்தி என்னை மேலும் துயரத்தில் ஆழ்த்த நானும் ஊர் திரும்பினேன்.

மறுநாள் எனது இணையரோடு சந்தவாசல் நோக்கிப் பயணமானேன். போகும் வழியில் கண்ணமங்கலம் கடைவீதியில் ஒரு ஏழெட்டுப் பூக்கடைகளில் சாவுக்கான மாலைகள் சரஞ்சரமாய் தொங்க விடப்பட்டிருந்தன. நேற்றும் கூட இதைப் பார்த்திருக்கிறேன். இங்கு மட்டுமல்ல, பூக்கடைகள் உள்ள எல்லா ஊர்களிலும் இதைப் பார்க்க முடியும். 'எந்த நம்பிக்கையில் இவர்கள் இப்படி மாலைகளைக் கட்டித் தொங்க விடுகிறார்கள்?'  என்று  இவர்களின் தன்னம்பிக்கையை எண்ணி வியந்தவாறு கடந்து சென்றேன்.

எல்லா வேளாண்குடித் தாய்மார்களைப் போல, வாழ்நாள் முழுக்க பிள்ளைகளைக் கரைசேர்க்க, வீட்டிலும் வயல்களிலும் விழுந்து புரண்டு ஓடி ஓடி உழைத்து ஓடாய்த் தேய்ந்து மெலிந்து, சலனமற்றுக் கிடந்த நண்பரின் தாயார் உடலைப் பார்த்தபோது, அவரோடு பழகிய உறவாடிய அனுபவம் எனக்கு இல்லை என்றாலும்,  என்னை அறியாமலேயே  என் கண்கள் கலங்கின. 

நம்மை நேசிக்கும் ஒருவருக்கு அல்லது நாம் நேசிக்கும் ஒருவருக்கு ஒரு இழப்பு என்றால்  நம்முள் இருக்கும் அன்புதான் இது போன்றத் தருணங்களில் நம் கண்களைக் குளமாக்குகின்றன.

ஒரு சில உறவுகளின் சம்பிரதாய அழுகைகளின் ஊடே, மரணித்தவரோடு நண்பர்களைப் போலப் பழகிய சில உறவுகளும், உறவுகளைப் போலப் பழகிய சில நண்பர்களும் கதறி அழும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது அதைப் பார்க்கின்ற நமக்கும் கண்கள் கலங்குகின்றன. இந்த அழுகைதான், இறந்து போனவர் சேர்த்து வைத்த சொத்து என்பதை  கண்ணீர் மூலம் நமக்கு உணர்த்துகிறது. 

எத்தனையோ உறவுகள், எத்தனையோ நண்பர்கள், எத்தனையோ தோழர்கள் நம் வாழ்க்கையில் வந்து சென்றாலும்  ஒரு சிலருக்கு மட்டுமே நம் நெஞ்சத்தில் நீங்கா இடம் கிடைக்கும். 

'இடுக்கண் வருங்கால் நகுக' என்பதற்கிணங்க எனது வாழ்க்கைப் பயணம் தள்ளாடிய போது, நான் நடக்க முடியாமல் முடங்கிய போது, உதவிக்கரம் நீட்டி தூக்கி நிறுத்திய எனது ஆருயிர் நண்பர், போராடும் மக்களின் உற்ற தோழன், நான் 'சார்' என்று அன்போடு விளிக்கும், திருச்சி வழக்கறிஞர் போஜகுமார் மறைந்து நேற்றோடு ஓராண்டு உருண்டோடி விட்டது. 

வாழ்க்கைப் பயணத்தில் இன்பமும் துன்பமும் மாறிமாறி நேரிட்ட போதும், நிரந்தரமாய் நிலைத்திருப்பது பிரதிபலன் எதிர்பாராத அன்பு மட்டுமே என்பதை மரணங்கள்தான் உணர்த்துகின்றன.

ஊரான்
10.12.2024

No comments:

Post a Comment