Sunday, December 22, 2024

வயசானா வீட்லயே கெடக்க வேண்டியதுதானே?

நேற்று காலை ஒன்பது மணிக்கு வேலூர் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது, வந்து நின்ற ஆற்காடு நகரப் பேருந்திலிருந்து எண்ணற்ற எளிய மகளிர் இறங்க, அதே அளவு மகளிர் பேருந்தில் ஏற, சற்றே அங்கு தள்ள முள்ளு. 

கோப்புப் படம்

"வயசானதுங்கல்லாம் வீட்லயே கெடக்க வேண்டியதுதானே? யாரு கூப்டா இந்த வயசுல? எதுக்கு இப்டி முட்டி மோதிக்கினு போவனும்? ஓசின்னா வந்துட வேண்டியது" என மகளிர் இலவச பேருந்துப் பயணத்தை நக்கலடித்தார் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சாமான்யர். ஒரு சாமான்யருக்கே இந்த எண்ண ஓட்டம் என்றால் பகட்டானவர்களின் எண்ணம் எப்படி இருக்கும்? 

ஒருவர் ஆயாவாகிவிட்டால் "வீட்டில் முடங்கிக் கிட" என்பதுதானே எல்லோருடைய எண்ண ஓட்டமும்கூட. ஊறுகாப் பாட்டின்னா மட்டும் பம்முறாங்க, நாட்டுப்புறப் பாட்டின்னா நக்கல் பண்றாங்க.

வேறு வேறு இடங்களில் வாழும் தாங்கள் நேசித்தக் குடும்ப உறவுகள், வாழ்க்கைப் பயணத்தில் உடன் பழகிய நண்பர்கள் உள்ளிட்டோரைப் பார்ப்பதற்கும், அவர்களது வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வதற்கும், கோவில்களுக்குச் சென்று விருப்ப தெய்வங்களை வழிபடுவதற்கும், அவர்கள் விரும்பினாலும் நம்ம பாட்டிமார்களை வெளியே அழைத்துச் செல்ல ஒரு நாதி உண்டா? 

விசேசங்களுக்குக் குடும்பமே வெளியில் சென்றாலும், அவர்கள் திரும்பும் வரை பாட்டிமார்கள்தானே வீட்டைக் காக்கிறார்கள். வெளியே சென்று வந்தவர்கள் தனக்கு ஏதேனும் வாங்கி வந்திருப்பார்களா என ஏக்கத்துடன் பார்க்கும் முதியோரும் இருக்கத்தானே செய்கின்றனர்?

நேசமானவர்களை நேரில் சென்று பார்க்க, விரும்பிய தெய்வத்தை நேரில் சென்று வழிபட, கட்டணமில்லாப் பேருந்துகள்தானே இவர்களை அங்கே அழைத்துச் செல்கின்றன. வெளியில் அழைத்துச் செல்வதையே தொல்லையாய்க் கருதுகிறாய் நீ. ஆனால், அரசாங்கம் அழைத்துச் செல்கிறது இலவசமாய். போவட்டுமே, உனக்கென்ன நட்டம்?

அது மட்டுமா? இன்று வாணியம்பாடியில் பேருந்து நின்ற பொழுது, பனங்கிழங்குகளை விற்பதற்காக இரண்டு பாட்டிமார்கள் கூவிக்கொண்டிருந்தார்கள். கட்டணமில்லாப் பேருந்து இல்லை என்றால், அரிய வகை கிராமத்துக் கிழங்குகள்கூட பைபாஸ்களை நோக்கி வருவது அரிதுதானே?

இப்படி கத்தரி வெண்டை கீரை முருங்கை தேங்காய் கொய்யா வாழை என வகைவகையான பழங்களும் காய்கறிகளும் நகரில் உள்ள நமது வீட்டுக் கதவுகளைத் தட்டுகின்றனவே! எப்படி? அதுவும் மலிவாய். இந்த மலிவிலும் பேருந்தின் இலவசம் இருக்குதானே? 'வயசானா வீட்ல கெடக்க வேண்டியதுதானே, யாரு கூப்டா' என்று அலுத்துக் கொள்ளும் சிலரைப் போல, அவிங்க என்ன டாஸ்மாக் கடைக்காப் போறாங்க?
***
ஒருவர் குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைத்த போதும் வயசானால் அவரை பைசாவுக்குப் பேறாதவர் என உயிரோடு இருக்கும் போதே ஒதுக்கி வைக்கும் உலகம் இது. அவர் இறந்த பிறகு மட்டும் நினைத்துப் பார்க்குமா என்ன? 

நடு வீட்டில், மையத் தூண்களாய் கூரையைத் தாங்கி நின்ற தலைவனும் தலைவியும், மாமனார் மாமியாராய் அவதாரம் எடுத்த பிறகு, மாட்டுக் கொண்டாயின் மாடுகளானார்கள். புறக் கடையில் அடைக்கலமானார்கள். பேரன் பேத்திகள் வளர வளர, தாத்தா பாட்டிகளாய் மூப்பும் இவர்களை ஆட்கொள்ள, காய்ந்த வைக்கோலுக்காக காத்திருக்கும் மாடுகளைப் போல ஒரு சொம்பு கூளுக்காய் ஏங்கி நிற்கும் ஏதிலிகளானார்கள். 

இணையாய் இருக்கும்போது, பேச்சையே ஒருவருக்கொருவர் பரிமாறி வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். இணை ஒன்று உதிர்ந்து போனால் பேச்சுத் துணைக்கே ஆளின்றித் தவிப்பார்கள்.
 
இறுதி மூச்சு நிற்கும் போது தலையணை படுக்கைக்கடியில் துழாவித் துழாவி, காதையும் மூக்கையும் கழுத்தையும் தடவி, அகப்பட்டதை கமுக்கமாய் அமுக்கி, கடைசியில் தாம்புக் கயிரையும், இடுப்பு முடிச்சையும் உருவி எடுத்து அன்றோடு அவர்களை மறந்து போகும் மாந்தர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.



இதற்கு முற்றிலும் மாறாக இங்கே, பேரன்களும் பேத்திகளும் சேர்ந்து, உறவுகளை அழைத்து, தங்களது ஆயா மறைவின் ஓராண்டை நினைவு கூர்ந்தார்கள் இன்று. அவர் தொன்னூறைத் தாண்டியும் முடங்கி விடாமல் துடிப்போடு வாழ்ந்ததற்கும் இந்தப் பேரன் பேத்திகளின் அரவணைப்பே ஆதாரம். 

வழக்கமானவைகளைவிட அபூர்வமானவைககள்தானே நம் மனதிலும் ஆழப் பதிகின்றன. 

பெரியார் உணர்வாளர்களின் குடும்பக்கூடல் நிகழ்வுக்கு வீடுதேடி அழைப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து இங்கு நான் வரக் காரணம் அவர் எனது மாமியாருமன்றோ!

முதியோர்கள், நாம் குழந்தையாய் தவழ்ந்த போது, நம் கரம்பிடித்து வளர்த்தவர்கள், முதிர்ந்து தளர்ந்து தள்ளாடும் பொழுது, அவர்களை அரவணைக்க வேண்டியது நமது கடமையன்றோ? 

வஞ்சம் இல்லா நெஞ்சம் இருந்தால் வாழ்க்கையும் இனிக்கும்தானே?

ஊரான்

No comments:

Post a Comment