நான் வழக்கமாக எழுதும் அனுபவக் கட்டுரைகள், நூல் திறனாய்வுக் கட்டுரைகள், மட்டுமன்றி, 2021 இல் தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள், 2022 இல் தேசிய இனப் பிரச்சனை, 2023 இல் ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பல்வேறு சமயங்களில் சனாதனம் என சில சிக்கலான தலைப்புகளிலும், தொடர் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.
எனது கட்டுரைகளை வலைப் பூக்களில் (blogs) வெளியிடுவதோடு, அலுவலக நட்பு வட்டம், உறவுகள் வட்டம் மற்றும் தோழர்கள் வட்டம் என வாட்ஸ்அப் குழுக்களில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பேரிடமும், இரண்டு முகநூல் கணக்குகளில் சுமார் பத்தாயிரம் பேரிடமும், எக்ஸ் தளத்திலும் எனது கட்டுரைகளை பகிர்ந்து வருகிறேன்.
ஆனால் மேற்கண்ட எனது கட்டுரைகளை எத்தனை பேர் முழுமையாகப் படிக்கின்றனர் என்பது தெரியவில்லை. மிகச் சொற்பமானவர்கள் மட்டுமே முழுமையாகப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
பள்ளி மேல்நிலைக் கல்வி இறுதி ஆண்டு படிக்கும், 17 வது அகவையில் இருக்கும் எனது உறவுவழிப் பேரனை இன்று சந்தித்துக் கேட்ட பொழுது எனது கட்டுரைகள் அனைத்தையும் முழுமையாகப் படிப்பதாகவும், ஆனால் அவற்றில் சில எழுத்துப் பிழைகள் இருப்பதாகவும் அவன் தெரிவித்த போது நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனேன்.
மேலும் நமக்கு ஏற்படும் ஐயங்களுக்கு விடைதேட செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட சில Appகள் குறித்தும் எனக்கு ஆலோசனை கூறிய போது அவன்மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. கையடக்கக் கைபேசியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு சாட்சியாய் இந்த மாணவன் காட்சியளிக்கிறான். 66 ஐ, 16 தானே கரம் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.
நிற்க, இந்தியாவைவிட அமெரிக்கா, ருஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அதிகமானோர் எனது வலைப்பூ பக்கங்களைப் படிக்கின்றனர். மேற்கண்ட இத்தகைய ஆறுதல்கள் மட்டும்தான் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.
மற்றவர்கள் படிப்பது ஒரு புறம் இருக்கட்டும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் எனக்குத் தெரிந்த தோழர்களில் பலர் எனது கட்டுரைகளைப் பார்ப்பதே இல்லை என்பதை மட்டும் அறிய முடிகிறது. பார்த்தால்தானே படிக்கவாவது தோன்றும். நான் எழுதுகிறேன் என்பதற்காக அவர்கள் படிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் தோழர்களில் சிலர் தரவுகள் இன்றி பல இடங்களில் தடுமாறுவதைப் பார்க்கும் பொழுது கவலை அளிக்கிறது.
'புவி வெப்பமயமாதல் காரணமாகவும், காலநிலை மாற்றங்களாலும் அண்மைக் காலங்களில் திடீர் திடீர் எனப் புயல்கள் உருவாவதாகவும், அவை கரையைக் கடக்கும் போது கடுமையானப் பாதிப்புகளை உருவாக்குவதாகவும்' குறிப்பானத் தரவுகள் இன்றி புரிந்து கொள்வதும் .
"பாசிச ஜெயாவுக்கு செம்பரம்பாக்கம்!
மு.க.ஸ்டாலினுக்கு சாத்தனூர் அணை!" என்று எழுதுவதும் போதியத் தரவுகளின்றித் தடுமாறுவதாகத்தான் நான் பார்க்கிறேன்.
எது எப்படி இருந்தாலும், நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்ற முனைப்போடுதான் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எனக்குள்ள இந்த அனுபவம் மற்ற சில சமூக ஊடக நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் இருக்கும் எனக் கருதுகிறேன்.
தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் இட ஒதுக்கீடு குறித்த தொடரில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, மிகவும் அவசியமான வரலாற்றுத் தரவுகள் பல உள்ளன. மேலும், இடஒதுக்கீடு சிக்கல்களால் இன்று சாதிகளுக்கு இடையில் பெருகி வரும் பகைமை குறித்தும், அதைத் தடுப்பதற்கான தீர்வு குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கு. இட ஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
(SC, ST, BC, MBC என்கிற ஒத்தத் தன்மையுள்ள சாதிகளின் தொகுப்பு) என்ற தளத்திலிருந்து அடுத்து சாதிவாரி பிரதிநிதித்துவம்
(வன்னியர் தனி ஒதுக்கீடு போன்ற) என்ற தளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் எனது பணி இனியும் தொடரும்.
ஊரான்
\\எனக்குள்ள இந்த அனுபவம் மற்ற சில சமூக ஊடக நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் இருக்கும் எனக் கருதுகிறேன்//
ReplyDeleteஎனக்கும் உண்டு.
கடும் விவாதத்திற்குரிய பதிவுகளை[கடவுள், மதங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவை] நான் அவ்வப்போது எழுதுவது உண்டு.
அநாகரிகமான முறையில் இடப்படும் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிப்பதில் நேரம் வீணாவதால் கருத்துப் பெட்டையைச் சில ஆண்டுகளுக்கு முன்பே பூட்டி வைத்தேன்.
வருகையாளர் எண்ணிக்கை சில நூறுகளாக[எப்போதாவது அந்த எண்ணிக்கை அதிகரிப்பதுண்டு] இருப்பதால், போதும் என்றெண்ணித் தொடர்ந்து எழுதுகிறேன்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் பொழுதைக் கழிக்கவே எழுதுகிறேன். அது ஓரளவுக்கேனும் பிறருக்குப் பயன் தருவதாக அமைவதையும் விரும்புகிறேன்.
நன்றி.
திருத்தம்... கருத்துப் பெட்டையை>பெட்டியை
Delete