அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு (EWS)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (any backward class) மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 15(4) மற்றும் 16(4) வழிவகை செய்கிறது. இங்கே அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் any backward class என்பது SC, ST & OBC பிரிவினரை மட்டுமே குறிக்கும்.
மேற்கண்ட சட்டப்பிரிவுகளின்படி, பிற்பட்ட வகுப்பு என்பதன் பொருள் சமூகத்திலும், கல்வியிலும் (socially and educationally backward) பின்தங்கிய பிரிவு மக்களைக் குறிப்பதாகும். இந்த வரையறைக்குள் வராத, பொருளாதாரத்தில் மட்டும் பின்தங்கியவர்கள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது சட்டத்திற்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் எதிரானது.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு, 103 வது சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து, அரசமைப்புச் சட்டத்தில் 15(6), 16(6) ஆகியப் பிரிவுகளைப் புகுத்தி, ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சம் வரை சம்பாதிக்கின்ற பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர் (EWS) என்று நாமகரணம் சூட்டி, 10% தனி இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது மோடி அரசு.
ரூபாய் 8 லட்சம் சம்பாதிக்கிறவன் பொருளாதாரத்தில் பலவீனமானவனாம்? கணக்குல அந்த சாணக்கியனையே மிஞ்சிட்டானுங்க! இருக்காதா பின்ன? சாணக்கியனின் வாரிசுகள்தானே இவர்கள்?
பார்ப்பனர்களால் நிரம்பி வழியும் உச்ச நீதிமன்றமும், இந்த ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உறுதி செய்து கொண்டது. குற்றவாளியே தனக்கான தீர்ப்பை எழுதிக் கொள்வது என்பது இதுதானோ?
இந்த EWS இட ஒதுக்கீடு என்பது ஏதோ மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மட்டும் என்று கருதி விட வேண்டாம்.
SC, ST & OBC பிரிவு மக்களுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாத போது, EWS இன் கீழ் வரும் பார்ப்பனர்களுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பெற வழிவகை செய்துள்ளது இந்தச் சட்டத் திருத்தம்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக, பல வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடே இல்லாதிருந்த போது, வாய் பொத்திக் கொண்டிருந்த வட மாநில ஆட்சியாளர்கள், இன்று மாநில அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும்கூட இந்த 10% இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுக்கத் தயாராகி விட்டனர். ஏமாந்த சோணகிரிகள் இருக்கும்வரை பார்ப்பனர்கள் நமது தலையில் ஏறி மிளகாய் அரைப்பதை யாரால்தான் தடுக்க முடியும்?
அன்று மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவதற்கு எதிராகச் செயல்பட்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), இன்று பார்ப்பனர்களுக்கான EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்ததன் மூலம், கம்யூனிஸ்டுகளின் மீது கரும்புள்ளியைக் குத்திவிட்டனர்.
மேற்கண்ட 10% இட ஒதுக்கீட்டின் மூலம், இன்று மொத்த இட ஒதுக்கீடு 59.5% ஆக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்ன வரையறை இன்று காற்றில் பறக்கிறது.
மண்டல் குழு பரிந்துரையின்படி, அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்த போது, ஒட்டுமொத்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதிக் கூட்டம், நாட்டில் மிகப்பெரியக் கலவரத்தை உண்டு பண்ணியது. ஆனால் இன்று, EWS இட ஒதுக்கீடு மூலம் SC/ST/OBC மக்களுக்கான வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்ட போதும் நமது மக்கள் மௌனம் காத்தனர். இந்த மௌனம்தான் பார்ப்பனர்கள் நம்மை ஏறி மிதிப்பதற்கு அடிப்படை.
பூரி ஜெகன்நாதர் கோயிலில் பிரகாரத்திற்கு வெளியே திண்ணைமேல் உட்கார்ந்து கொண்டு, பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதி பக்தர்களின் தலையைத் தங்களது கால் பாதத்தால் தொட்டு பார்ப்பன புரோகிதர்கள் ஆசீர்வாதம் செய்யும் காட்சிதான் இங்கே என் நினைவுக்கு வருகிறது.
EWS இட ஒதுக்கீடு நீதியா? அநீதியா?
இதில் கொடுமை என்னவென்றால், இந்திய அளவில் 52% உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27% மட்டும்தான் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. ஆனால், பட்டியல்-பழங்குடி-இதர பிற்படுத்தப்பட்டோர் (SC/ST/OBC) நீங்கலாக, ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது வகுப்புவாரி விகிதாச்சார பங்கீட்டுக்கு விரோதமானது.
SC/ST/OBC பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள 49.5% போக, மீதமுள்ள 50.5%
எனும் பொதுப் பிரிவிலும் SC/ST/OBC மக்கள் போட்டியிட முடியும். ஆனால் தற்பொழுது EWS என்ற பெயரில் 50.5% லிருந்து 10 சதவீதத்தை அவாள்கள் அபகரித்துக் கொண்டதால், SC/ST/OBC பிரிவினருக்குப் பொதுப்பட்டியலில் இருந்த வாய்ப்பு 50.5% லிருந்து 40.5% ஆக குறைந்து போனது. அதாவது, நமது மக்கள் பொதுப்பட்டியலில் 10 சதவீதத்தை இழந்து விட்டனர்.
ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு EWS என 10% தனியாகவும், பொதுப்பட்டியலில் 40.5% என அதே 50.5% வாய்ப்பும் தொடர்கிறது. எனவே, EWS ஒதுக்கீடு என்பது SC/ST/OBC மக்களுக்குப் பொதுப்பட்டியலில் இருந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்து, சமூக நீதிக் கோட்பாட்டுக்கு இழைத்த அநீதியாகும்.
இந்த அநீதிக்கு ஆதரவாய் நின்று நாடாளுமன்றத்தில் முழங்கியவர் சிபிஐ (எம்) ஐச் சார்ந்த 'தோழர்' டி.கே.ரங்கராஜன் அவர்கள்.
***
ஆக, இன்றைய தேதியில் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் (EWS) என அனைத்து சாதியினருமே இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிமையைப் பெற்று விட்டனர். பார்ப்பனர் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், இன்று கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் உள்ளே நுழைபவர்கள் அனைவருமே 'கோட்டா' தான்.
இப்படி எல்லாச் சாதியினருமே, இட ஒதுக்கீடு வாய்ப்புகளைப் பெறும் பொழுது, அவர்களுக்குள் இன்று முரண்களும் மோதல்களும் ஏன் வெடித்துக் கிளம்புகின்றன?
இட ஒதுக்கீடு கோட்பாடானது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திலிருந்து, சாதிவாரி பிரதிநிதித்துவத்தை நோக்கி நகர்கிறதா? அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment