Thursday, December 12, 2024

மண்டல் குழுவின் பரிந்துரைகள்! - 8

மண்டல் குழு 

முக்கியக் கூறுகள்

மண்டல் குழு தனது பரிந்துரைக்கான முக்கியக் கூறுகளாக கீழ்க்கண்ட நான்கு அம்சங்களை முன்வைக்கிறது. 

1.இந்தியாவில் உள்ள இந்துக்களில் 44% பேர், இஸ்லாமியர்-கிறித்துவர்-சீக்கியர் முதலான மதச் சிறுபான்மையினரில் 8% பேர் என மொத்தம் 52% பேர் பிற்பட்டவர்கள். 

2.அரசு வேலைகளில் சில ஆயிரம் பதவிகளை இவர்களுக்குக் கொடுத்து விட்டால், இவர்கள் அனைவராலும் முன்னேறி விட முடியுமா? முடியாது. ஆனால் தாங்களும் ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகிப்பதாகக் கருதுவதும், தங்களைச் சார்ந்தவர்களுக்கு, அரசு நிர்வாகத்தில் உரிய பங்கு கிடைத்திருப்பதாக இவர்கள் உணருவதும் இவர்களுக்கு மனநிறைவைத் தரும் ஒன்றாகும்.

3.கல்வியிலும் பண்பாட்டளவிலும் இவர்கள் காலங்காலமாக ஒதுக்கப்பட்டு வந்ததால் இவர்களிடம் திறமை குறைவு இருப்பது போலத் தோன்றலாம். ஆனால், வாய்ப்புக் கொடுத்தால் அந்தக் குறைபாடுகள் நீங்கிவிடும். 

(இன்று பொதுப் போட்டிகளில் பிற்பட்டவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்படுவது இவர்கள் திறமைசாலிகள் என்பதை உறுதி செய்கிறது).


4.இட ஒதுக்கீட்டின் நன்மைகளை பிற்பட்டோரில் உள்ள முன்னேறிய பிரிவினரே வளைத்துப் போட்டுக் கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது இவர்களிடம் மட்டுமல்ல,  ஒட்டு மொத்த சமூகமும் சமத்துவமின்மையில் சிக்கித் தவிக்கும் போது, இங்கு மட்டும் இது பற்றிப் பேசுவது பொருத்தமற்றது.

பரிந்துரைகள்
 
1. அகில இந்திய அளவில் பட்டியல் மற்றும் பழங்குடி சாதியினருக்கு (SC & ST) அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் 22.5% இட ஒதுக்கீடு தரப்படுகிறது.

அதேபோல, அகில இந்திய அளவில் கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கியுள்ள 52% பிற்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் விகிதாச்சார அடிப்படையில் 52% இட ஒதுக்கீடு தர வேண்டும். (மாநில அரசு வேலைகளில் இந்த சதவீதம் வேறுபடலாம்) ஆனால் இட ஒதுக்கீடு 50% க்கு மேல் போகக்கூடாது என உச்ச நீதிமன்றம் வரையறை செய்துள்ளதால் பிற்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2. மாநிலங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். 

3. தகுதி அடிப்படையில் பொதுப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படும்  பிற்பட்டோரை, இந்த 27% ஒதுக்கீட்டில் இருந்து கழிக்கக் கூடாது.

4. பதவி உயர்விலும் பிற்பட்டோருக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

5. ஒருவேளை, உரிய நபர்கள் பிற்பட்டோரில் இல்லை என்று பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தால் (back log), அந்த இடங்களை மூன்று ஆண்டுகள் வரையில் வைத்திருந்து நிரப்ப வேண்டும்.

6. வேலையில் சேருவதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும். 

7. ஒவ்வொரு பதவிப் பிரிவுகளிலும் (category) தனித்தனியாக ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். (எ.கா: பெல் போன்ற ஆலைகளில் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் என தனித் தனியாக...).

8. மேற்கண்டவாறு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு-

அ. மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் மட்டுமல்ல, மத்திய-மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும்,

ஆ. அரசு நிதி உதவி பெறும் எல்லா தனியார் நிறுவனங்களிலும்,

இ. எல்லாப் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும்

நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

9. மேற்கண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப, சட்டங்களும் விதிமுறைகளும் நடைமுறைகளும் திருத்தி அமைக்கப்பட வேண்டும். 

10. போதுமான கல்வி பெறுவதற்கு உரிய வசதிகள் மற்றும் சலுகைகள் தருவது உள்ளிட்ட வேறு சிலவற்றையும் மண்டல் குழு பரிந்துரை செய்துள்ளது.

வி.பி.சிங் அரசு செய்தது என்ன? 

மண்டல் குழு பரிந்துரைகளின்படி சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டு,

நடுவண் அரசு மற்றும் நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது பிற்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கும் நிர்வாக ஆணையை, 1990, ஆகஸ்டு 7அன்று வெளியிட்டது வி.பி.சிங் அரசு. 

ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் அப்படியே நீடிப்பார்கள். ஏற்கனவே எல்லா வேலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும்  உயர்சாதியினருக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.


வி.பி.சிங்

இவை பரிந்துரைகளின் ஒரு சிறு பகுதிதான் என்றாலும், சமூதாய நோக்குடன் கூடிய ஒரு அடித்தளமாக இது கருதப்படுகிறது.

ஆனால் இதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் போராட்டம் என்ற பெயரில் உயர் சாதியினர்
மிகப்பெரிய கலவரத்தை உண்டு பண்ணினர்.

மண்டல் குழு பரிந்துரை அமலாவதை எதிர்த்தவர்கள் யார் யார் என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்







No comments:

Post a Comment