Wednesday, December 11, 2024

OBC இட ஒதுக்கீடு: ஒற்றை நாடி மனிதனின் ஓயாத உழைப்பு! - 7

1980 இல், பிரதமர் இந்திரா காந்தியிடம் தரப்பட்ட மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடவும், மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும் 1981 மார்ச் வரையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

1981 மார்ச் மாதத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம் இது இதுகுறித்து ஆனைமுத்து அவர்கள் விளக்கிய போதும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. 

1982 ஜனவரி 25 இல் ஆனைமுத்து அவர்கள், பிரதமரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

ஆனைமுத்து

மண்டல்குழு அறிக்கையை 1982, ஜனவரி 25 க்குள் வெளியிடவில்லை என்றால் குடியரசு நாளை துக்க நாளாக கடைபிடிப்போம் என்று எச்சரிக்கையும் விடுத்தார் ஆனைமுத்து. 

மறுநாள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி பலர் சிறைப்பட்டனர். 

1982 பிப்ரவரியில் லக்னோவில் மிகப்பெரிய பேரணி ஒன்றும் நடைபெற்றது. அதில் ஆனைமுத்து அவர்களும், சேலம் சித்தையன் அவர்களும் ஆற்றிய உரையால் அங்குள்ளோர் வீறு கொண்டனர். அதற்கு அடுத்த மூன்றாவது நாள், அதே லக்னோவில் மீண்டும் ஒரு பேரணி நடத்தப்பட்டது. 

உள்துறை அமைச்சரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டாலும், மண்டல் குழு அறிக்கை நடைமுறைக்கு வருமா என்கிற உத்தரவாதம் இல்லாததால், "பிற்பட்டோரின் கதி என்ன?" (Whither Backward Classes) என்ற ஆங்கில நூல் ஒன்றை எழுதி  அச்சிட்டு, லக்னோ பேரணியில் பரவலாக விநியோகம் செய்தனர்.
இதையொட்டி உத்தர பிரதேசமே உணர்ச்சிப் பிழம்பாய் கொந்தளித்தது. 

பிப்ரவரி 1983 இல் 160 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  மேற்கண்ட ஆங்கில நூல் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்த பிறகு அது ஓரளவுக்குப் பலன் தந்தது. 

1983 மார்ச் மாதத்தில் இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆதரவு கோரப்பட்டது.

1981 முதல் 1983 வரை மேற்கொண்ட‌ கடுமையான முயற்சிகளுக்குப் பிறகுதான் 1983, ஏப்ரல் 4 அன்று மண்டல் குழு பரிந்துரை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. 

இதன் ஊடே, தமிழ்நாட்டில் 1981 ஜனவரி முதல் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற்பட்டோர் சாதிச் சங்கங்கள் மண்டல் குழு அறிக்கை அமலாவதில் தீவிரம் காட்டினர்.

ஒரு குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கே இவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது என்றால், அதை அமல்படுத்துவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருந்திருக்கும்? 

***
வட மாநிலங்களிலும், தென்மாநிலங்களிலும் மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி போராட்டங்கள் வலுப்பெற்ற போதும், பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் உருப்படியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அறிஞர்களிடம் கருத்து கேட்பது என்ற பெயரால் இழுத்தடிக்கவே முயற்சி செய்தார்.

இதுவரை தன்னோடு பயணித்த சேலம் சித்தையன் அவர்கள் 1984 இல் மறைவுற்ற போதும், போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த ராம் அவதோஷ் அவர்கள் 1980, 1984 ஆகிய இரு நாடாளுமன்றத் தேர்தல்தளில் தோல்வியுற்று தொடர்பு துண்டிக்கப்பட்ட போதும், ஆனைமுத்து அவர்கள் துவளாமல் போராட்டங்களை முன்னெடுத்தார்.

1984 க்குப் பிறகு மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி வட மாநிலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1986 இல் வட மாநிலத் தலைநகரங்களிலும், டெல்லியிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. 

1986 முதல் 1988 வரை டெல்லியில் மூன்று மாதங்களும், மேற்குவங்கத்தில் ஒரு மாதமும், அசாமில் 15 நாட்களும் அங்கேயே தங்கி இருந்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம் அவர்களின் துணையோடு, 
மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவதற்காக ஆனைமுத்து அவர்கள் பணியாற்றினார்.

தேசிய இன விடுதலை ஆர்வலர்களையும், ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்களையும் அழைத்து 1986 நவம்பரில் கல்கத்தாவில் மார்க்சிய-லெனினியக் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஆனைமுத்து அவர்கள் தன்னுடைய தோழர்களோடு பங்கேற்று வகுப்புரிமை உணர்வை ஏற்படுத்தினார்.

1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் "அசாம் இட ஒதுக்கீடு அய்க்கியப் பேரவை"யினர் அழைப்பின் பேரில், சிலிகுரி மாநாட்டில் பங்கேற்றதோடு அசாம் மாநிலத்தில் பத்து நாட்கள் வகுப்புரிமை பரப்புரையையும் மேற்கொண்டார் ஆனைமுத்து. 

1988 இல் பஞ்சாபிலும், 1990 இல் டில்லியிலும் மார்க்சிய-லெனினியர்கள் மேற்கொண்ட வகுப்புரிமைப் பணிகளிலும்,

1988 முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் அவதோஷ் சிங் அவர்கள் பீகாரிலும், ஹரியானாவிலும் மேற்கொண்ட வகுப்புரிமைப் பணிகளிலும் ஆனைமுத்து அவர்கள் பங்கேற்றார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் எல்லாக் கட்சிகளும் இதில் அக்கறை காட்டின.

***
மேற்கண்ட பணிகள் தவிர, 1979 முதல் 1980 வரை பல்வேறு மாநிலங்களில், பலதரப்பினரையும்
மண்டல குழு சந்தித்து விவரங்களைக் கேட்டுப் பதிவு செய்த போது, ஆனைமுத்து உள்ளிட்டோரின் முயற்சியால் அமைக்கப்பட்ட "அனைத்திந்திய பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவை" சார்பில், 1979 ஜூன் மாதத்தில் இரு நாட்கள் தஞ்சையில் மண்டல் குழுவினரை நேரில் சந்தித்து, வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் சான்றுகளை முன் வைத்தார் ஆனைமுத்து.

மண்டல் குழு அமைப்பதற்காகவும், அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்காகவும், பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும் ஐயா ஆனைமுத்து அவர்கள் மேற்கொண்ட பணிகள் உண்மையிலேயே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

இந்த ஒற்றை நாடி மனிதனின் உழைப்பு இல்லை என்றால் OBC மக்களுக்கு ஏது ஒதுக்கீடு?

அடுத்து மண்டல் குழு பரிந்துரைகள் பற்றிப் பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்






4 comments:

  1. வெங்கடகிருஷ்ணன் (வாட்ஸ் அப் குழுவில்): பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக அரும் பாடுபட்ட ஆனைமுத்து அவர்களை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளே மறந்து விட்டாலும் அவரது பணியை விரிவாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. திருமால் (வாட்சப் குழுவில்): சிறப்பான பதிவு. மண்டல் கமிஷன் அறிக்கை குறித்தும் , அது செயல்படுத்தப்பட்ட சூழல் மேலும் விவரங்கள் இருந்தால் பதிவிடுங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. மண்டல்குழு அறிக்கை தொடர்பாக அய்யா ஆனைமுத்து அவர்களின் போராட்டம் மற்றும் அது குறித்தும், அவர் தொகுத்து எழுதிய நூல் குறித்தும் 16 தொடர்கள் எழுதி இருக்கிறேன். இணைப்பில் உள்ளது கடைசி பகுதி. இந்தக் கடைசிப் பகுதியை சொடுக்கினால் அதற்குள் மற்ற 15 தொடர்களும் இறுதியில் இருக்கும். ஒவ்வொன்றாக சொடுக்கி அவைகளை வாசிக்கலாம். அதில் மண்டல்குழு அறிக்கை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
      ஆர்வத்திற்குப் பாராட்டுகள்.
      https://hooraan.blogspot.com/2024/12/16.html?m=1

      Delete
  3. சா.குப்பன் (முகநூலில்): மிகவும் தெளிவான வரலாறு! மிக்க நன்றி தோழர்!

    ReplyDelete