Thursday, December 19, 2024

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், இடப் பங்கீடும் - 16

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், இடப் பங்கீடும்

மண்டல் குழு பரிந்துரையின் போது 'மண்டலுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை; நாங்கள் நடுநிலை வைக்கிறோம்' என்பது போன்ற "கடமை தவறிய" நிலைப்பாடுகளை எடுக்காமல், தற்போது உருவாகி வரும் சாதிவாரி இட ஒதுக்கீடு கோரிக்கையில் ஒரு சரியான திசையை நோக்கி மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைவருமே சிந்திக்க வேண்டும்.

எனவே, சாதிவாரி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சாதி வாரியாக ஏற்கனவே உள்ள பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுத்து, தற்போதைய வகுப்புவாரி இட ஒதுகீட்டிற்குப் பதிலாக, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப, விகிதாச்சார அடிப்படையில் சாதிவாரி இடப் பங்கீடு கொடுப்பதற்கானப் பணிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வது ஒன்றுதான், மக்களிடையே பெருகி வரும் சாதியக் காழ்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். 


வண்ணார், நாவிதர், இருளர் போன்ற ஒரு சில மிகவும் பின்தங்கிய சாதியினரின் நிலைமையைக் கண்டறிந்து, இதுவரை கல்வியிலும் அரசுப் பதவிகளிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், முதலில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடத்தை ஒதுக்கலாம். இத்தகைய சிறுசிறு சாதிகளை ஒரு தொகுப்பாகவும் பகுக்கலாம்.

OC, EWS, SC, ST, OBC, MBC என்கிற வகுப்புவாரிப் பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மேற்கண்டவாறு சாதி வாரியாகவோ அல்லது சிறு சிறு சாதிகளின் பகுப்பாகவோ பிரித்து புதிய முறையில் இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்துவதே இன்றைய சூழலில் சாலப் பொருந்தும்.

அதந்தச் சாதிகளுக்கு உரியப் பங்கை அவரவர்களுக்குக் கொடுத்து விட்டால், தனது வாய்ப்பை 'அவன் எடுத்துக் கொண்டான், இவன் எடுத்துக் கொண்டான்' என்பது போன்ற சாதியப் பொறாமைகளுக்கும் புலம்பல்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்க இது உதவக்கூடும். 

ஐயா ஆனைமுத்து அவர்கள் விரும்பியதைப் போல, இதுவரை இடஒதுக்கீடு (reservation) என்றிருந்ததை, இனி இடப்பங்கீடு (share) என மாற்றி அழைப்போம். 

மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனியார் துறைகளிலும் சாதிவாரி இடப் பங்கீட்டைக் கொண்டுவரக் கோருவோம். இல்லையேல் அங்கும் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஒரு சில உயர் சாதியினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி அங்கேயும் பிற சாதி மக்களை கீழ்நிலையிலேயே வைத்திருக்க முயல்வர்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்படும் EWS இட ஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டு, விகிதாச்சார அடிப்படையில் உயர் சாதியினருக்கும் தனியாகப் பிரித்து, அவர்களுக்கு உரியப் பங்கைக் கொடுத்துவிடலாம். ஏழ்மைதான் அளவுகோல் என்று அவர்கள் விரும்பினால், அதை அவர்கள் சாதிக்குள் அமல்படுத்தட்டும். அது அவர்களுடைய விருப்பம்.

கல்வி நிலையங்களில் சேருவதற்கும், வேலைகளில் சேருவதற்கும் ஒரு குறிப்பிட்ட சாதியில் ஆட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாமல் இருக்க, பள்ளிக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும், கல்வியின் தரத்தை மேம்படுத்திப் பரவலாக்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்தந்தச் சாதிகளில் இருந்து நிரப்பப்படாத இடங்கள் (back log) என்ற பேச்சுக்கே இடம் தரக்கூடாது.

உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நகர்ப்புறத்தில் உள்ளவர்களே அதிகமாக அபகரித்துச் செல்வதால், நகர்ப்புறங்களில் கிடைப்பது போன்ற தரமானக் கல்வி கிராமப்புறங்களில் கிடைப்பதற்கும், கிராமப்புற மாணவர்களுக்கான இடப்பங்கீட்டில் நடைபெறும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தொடரவும், கல்வியைக் காசாக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், கல்வி தொடர்பான அனைத்தையும் மாநிலப் பட்டியலில்
உறுதி செய்வதும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியப் பணிகளாகும். 

***
இதுவரை நான் விவரித்து வந்த அனைத்து விவரங்களும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் நிறுவனரும், மண்டல் குழு மூலம், பிற்படுத்தப்பட்டோருக்கு உரியப் பங்கைப் பெறுவதற்கு ஓயாது உழைத்த ஒப்பற்றத் தலைவருமான ஐயா தோழர் ஆனைமுத்து அவர்களின் "மக்கள் நாயக உரிமைப் போர்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த நூல் வலியுறுத்தும் சாரத்தைப் புரிந்து கொள்வதற்காகத் தற்போதைய சில நிகழ்வுகளையும் ஆங்காங்கே நான் சேர்த்துள்ளதோடு, இறுதியாகச் சாதிவாரி இடப் பங்கீட்டுக்கான அவசியத்தையும் முன்வைத்திருக்கிறேன்.

ஆனைமுத்து ஐயா அவர்கள், ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் அல்ல. அதனால் வாசகனை மயக்கம் வசீகரச் சொற்கள் இந்நூலில் இல்லை. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடப் பங்கீட்டைப் பெறுவதற்கு நடத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இடப் பங்கீடு போராட்டம் குறித்த ஒரு வரலாற்று ஆவணம் இந்நூல். 146 பக்கங்கள் கொண்ட இந்நூலை நான் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். வரலாற்றுச் செய்திகளைக் கால வரிசைப்படுத்தி, மேலும் சில கூடுதல் விவரங்களோடும், களப் போராட்டப் புகைப்படங்களோடும் இந்த நூலை செழுமைப்படுத்தி வெளியிடுவது இன்றைய காலத்தின் அவசியமாகப் படுகிறது. 

ஐயா ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டில் இந்த நூல் குறித்து அறிமுகம் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன். ‌ திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மு.க.ஸ்டாலின் அரசு, ஐயா ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடிப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.

முற்றும் 

ஊரான்


நூல் வெளியீடு:
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி
2/12, சி.என்.சந்து,
சேப்பாக்கம்
சென்னை
அலைபேசி: 86681 09047

தொடர்புடைய பதிவுகள்














No comments:

Post a Comment