Wednesday, December 10, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 6

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்லப் பாம்பே!
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே!
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே! (20)

என்ற பிரபலப் பாடலைப் பாடிய பாம்பாட்டிச் சித்தர்,


“பொய்ம் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே! (11)’

என பொய்யான மதங்களைப் போதிக்கும் போலி குருமார்களுக்குப் புத்திமதி சொல்வதோடு, 

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பிற்குற்றம் போமா? அஞ்ஞானம்?
போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே! (92)”. 

என கல்லில் செதுக்கிய சிலைக்கு ஏதடா உணர்ச்சி எனக் கேள்வி எழுப்பி,

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்
எண்திசை திரிந்துங் கதி எய்தல் இல்லையே!
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே! (94)”,

நீ எத்தனை கோவில் கட்டி பூசை செய்தாலும் கடவுளைக் காண இயலாது என எடுத்தியம்பி,

சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடுபாம்பே!. (98)”,

வேதங்களும், சாஸ்திரங்களும், புராணங்களும், ஆகமங்களும் வீணான நூல்கள் என துணிந்து சொல்லி,

“சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே அல்லாதுசற் சாதுக் களுக்கோ?
சிமயத்தி லேறினபேர் சித்தம் மாறுமோ?
சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே! (99)”

சாதி பேதம் நமக்குக் கூடாது என புத்திமதி சொல்லி,

பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ?
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாம் என்று துணிந் ஆடுபாம்பே! (100)”

பூசை செய்து ஊர்ஊராய்ச் சுற்றி வந்தால் புண்ணியம் உண்டோ என வினா எழுப்பி,

“தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீராகில்
இனிப் பிறப்பு இல்லையென்று ஆடுபாம்பே! (113)”

சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்
அறியார்கள் இதையென் ஆடுபாம்பே! (123)”

என் சாதிப் பிரிவினைக்குத் தீ மூட்டச் சொல்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இப்படி, சனாதன சங்கிகளுக்கு எதிராகப் படமெடுத்து ஆடுகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சங்கிகளுக்கு எதிரான சித்தர்களின் ஆட்டம் தொடரும்...

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 5

No comments:

Post a Comment