Tuesday, December 2, 2025

நான் வலைப்பூ தொடங்க உதவிய உந்து சக்தி!

மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒன்றுபட்ட அமைப்பாக இருந்த பொழுது அதன் தோழமை ஊடகமான வினவு தளம் குறித்து நான் எழுதிய பதிவு. தோழர் நாதன், தோழர் மருதையன் உள்ளிட்டோரின் பங்களிப்பினால், அன்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த வினவு, இன்று சில கெடுமதியாளர்களின் கையில் சிக்கிக் கொண்டதால் சீந்துவாறின்றிக் கிடக்கிறது. 
***
எனது பார்வையில் வினவு : ஊரான் 
(ஆகஸ்டு 1, 2013)
***

நான் படிப்பது, பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என எனது புலனறிவுக்கு எட்டியவை குறித்து பிறரோடு பகிர்ந்து கொள்வதும், அதன் மீதான மற்றவர்களின் கருத்துக்களை அறிய விரும்புவதும் எனது அன்றாட வழக்கம். வினவு தொடங்கிய போது வினவில் வெளியான படைப்புகளைப் படித்து விட்டு அதன் மீதான கருத்துகளைக் கூட என்னால் தெரிவிக்க முடியாமல் தவித்த காலம். நான் படித்ததை நண்பர்களோடு, தோழர்களோடு பகிர்ந்து கொள்ள முயற்சித்தால் அவர்கள் வினவு படிப்பதில்லை அல்லது படிக்க வாய்ப்பில்லை என்பார்கள். உலகின் அழகிய மணமக்கள் ! கட்டுரையை செப்டம்பர் 2010-ல் படித்த போது அதன் மீதான கருத்தை எப்படியாவது சொல்ல வேண்டும் என்கிற உந்துதல் என்னுள் எழுந்த போது தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த தோழர் ஒருவரின் மூலம் அதன் மீதான எனது கருத்தை பதிவு செய்தேன். அது ஒரு நீண்ட கருத்துப் பதிவு. இப்படித்தான தொடங்கியது வினவோடு எனது உறவு.

அதன் பிறகு நானே தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்து கொண்டு பல கட்டுரைகளில் எனது கருத்துக்களை பதிவு செய்யலானேன்.  மே 2010-ல் வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !! என்கிற வினவில் வெளியான கட்டுரை அக்டோபர் 2010-ல் ஊரான் வலைப்பூ தொடங்கக் காரணமாக அமைந்தது. நவம்பர் 2010-ல்  “ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா? என்கிற கட்டுரையும், டிசம்பர் 2010-ல் மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்! என்கிற கட்டுரையும் வினவில் வெளியான போது என்னாலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு சில கட்டுரைகளை நான் வினவுக்கு அனுப்பிய போது எனக்குக் கிடைத்த பதில் “மக்களின் போராட்டங்கள், அதன் விவரங்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அனுப்புங்கள்” என்பதுதான். வினவின் வருகைக்குப் பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது அதிகரித்துள்ளது என்பதை வலையுலகம் நன்கறியும்.

இணைப்பு
மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம்.








பெரும்பாலும் தனிமனித சிந்தனை சார்ந்த கட்டுரைகளே என்னால் எழுத முடிந்தது. மக்களின் அன்றாடத் தேவைகள், அதற்கான போராட்டங்கள் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுரைகளை அனுப்பக் கோரினர். தனிமனித சிந்தனைப் போக்கு குறித்து எழுதுவது சுலபமானது, ஆனால் மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம் என்பதை உணர வைத்தது வினவு.

தனி மனிதனின் சிந்தனையில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டால் சமூகம் தானாக மாறிவிடும் என்கிற மேம்போக்கான கருத்தையே பலரும் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் ஒழுக்க நெறிகளை அன்றாடம் போதித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய போதனைகள் எதுவும் மக்களிடம் எடுபடுவதில்லை. வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது, எனவே வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டம் இன்றி சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்கிற மார்ச்சிய பாடத்தைத்தான் வினவு நம்மிடையே பதிய வைக்கிறது.

ஒரு சமூகம் சீரழிந்துள்ளது என்றால் அது பின்பற்றும் அரசியல் – பொருளாதார கொள்கைகளும், நடைமுறைகளுமே காரணமாக அமைகின்றன. இதை மாற்றி அமைக்காமல் ஒட்டு மொத்த சமூகத்தையும் விடுவிக்க முடியாது. இதற்கு மார்ச்சியத்தைத் தவிர வேறு சித்தாந்தங்கள் ஏதும் கிடையாது. ஆனால் பெண்ணியம், சூழலியம், தலித்தியம், தமிழியம் என ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவற்றை சரி செய்தால் போதும் எனப் போராடுகின்றனர். இத்தகைய அணுகுமுறை மக்களை பிளவு படுத்துவதோடு மக்கள் விரோத அரசை தூக்கி எறிந்து ஒரு மாற்று மக்கள் அரசை அமைப்பதற்கு பெரும் தடையாக அமைகின்றன.

வினவு வெறும் ஊடகம் அல்ல. வினவு ஒரு போராளி. அதனால்தான் மக்களின் அன்றாட வாழ்வைப் பறிக்கும் அரசின் கொள்கைகள், நடைமுறைகள் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்துகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்து எழுதும் போது  மக்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? சமரசவாதிகள் யார்? என்பதை அடையாளம் காட்ட வேண்டி வருகிறது. இத்தகைய சூழலில்தான் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள், சாதி – மத அமைப்புகள், இனவாதிகள் என பலரும் அம்பலப்பட்டுப் போகிறார்கள். அவர்களை மக்களின் எதிரிகளாக வினவு காட்டவில்லை. அவர்களேதான் அம்பலப்பட்டுப் போகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் வினவுக்கு எதிராக நிற்கின்றனர். மக்களின்பால் பற்று கொண்டோர், பிறகு வினவின் கருத்தை ஏற்கின்றனர். பிழைப்புவாதிகள் மட்டுமே தொடர்ந்து வினவை எதிர்த்து வருகின்றனர். வினவின் வாசகன் என்கிற முறையில் வினவை நான் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளேன்.

புகழ்வதற்காக நான் இதை எழுதவில்லை. புரிதலுக்காகத்தான் எழுதுகிறேன். வினவுக்கு ஆலோசனைகள் சொல்வதைவிட வினையாற்ற செல்வதே மேல் எனக் கருதுகிறேன்.

நன்றியுடன்
ஊரான்
www.hooraan.blogspot.com

No comments:

Post a Comment