ஊட்டியைத் தொட்ட உறைபனி, நாட்டுப்புறத்தையும் தொட்டு விடுமோ என்கிற அச்சம் நிலவும் மார்கழி மாதக் கடுங்குளிர். எட்டு மணிவரை இழுத்துப் போர்த்தித் தூங்கலாம் என்றால், எதிரில் உள்ள செல்வ விநாயகன் எம்மை நாலரைக்கெல்லாம் எழுப்பி விடுகிறான்.
வாலாஜா 'ஹவுசிங் போர்டில்' உள்ள செல்வ விநாயகனுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்’ கேட்பது அபச்சாரமன்றோ?
காலை வேளையில், கடுங்குளிரில் நடுங்கியவாறு வெளியே போய் புரோகிதம் பண்ணி பையை நிரப்ப எதுக்கு ஓய் ‘ரிஸ்க்’ எடுக்கணும்? அவாளையெல்லாம் கோவிலுக்கு வரவழைத்து விட்டால், கர்ப்பக் கிரகத்தின் கதகதப்பிலேயே காசு பார்க்கலாமில்லையோ? அதுக்குத்தானே ஓய் மார்கழியை அவாளுக்கு மட்டும் பீடை என்கிறோம்.
கண்ணனுக்காக ஆண்டாள், திருப்பாவையில் நெக்குருகிப் பாடும் பொழுது ஈசனுக்கும் மட்டும் ஏக்கம் வாராதோ? ஈசனின் ஏக்கம் போக்க, அவனை ஆராதித்து போற்றிப் புகழ, அதிகாலை வேளையில் திருவெம்பாவை பாடிக்கொண்டு கன்னிப் பெண்களைப் போகச் சொன்னால் ‘சீனியர் சிட்டிசன்கள்’ முண்டியடிக்கிறார்கள்.
***
டிசம்பர் 25, 1968 இல் 44 வேளாண் கூலிகள் வெந்து கருகி ஆண்டுகள் 57 உருண்டோடினாலும் பொதுமையர் எல்லாம் வெஞ்சினம் கொள்ளும் வெண்மணித் தியாகிகளின் நினைவு நாள் இது. இது தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள ஏழு மணிப் பேருந்தைப் பிடிப்பதற்காக வேலூர் நோக்கி விரைந்து சென்றோம். கணப்பொழுதில் அதைத் தவறவிட்டதால் அடுத்து வந்த ‘குளுகுளு’ பேருந்தில் அதிகக் கட்டணம் செலுத்தி திருச்சி நோக்கிப் பயணமானோம்.

முழுதும் மூடியப் பேருந்து என்பதனால் காலைப் பனியின் மூடுதிரையையும், ஓடி மறையும் மலைகளையும், எதிரே மோதவரும் 'காங்கிரீட்' காடுகளையும் காண முடியாமல் விழிகள் ஏங்கிக் கலங்கின. திரைச் சீலையின் இடுக்கில் பார்க்க முனையும் போது நடத்துநரின் ‘இழுத்து மூடுக’ எனும் ஓசை மட்டும் காதுகளை முட்டும்.
பிற்பகல் இரண்டு மணி. திரை இடுக்கில் எட்டிப் பார்த்தேன். கதிரவனின் கதிர்கள் பட்டு பளிச்சிடும் காவிரி டெல்டாவை நோக்கி சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தாள்.
நகர இடுக்குகளின் நெரிசலில் சிக்கி மூச்சுமுட்டாமல், அலுக்காய் அடைக்கலத்தை நோக்கிச் செல்ல பேருந்துகள் எல்லாம் இப்பொழுது புறவழியையே நாடுகின்றன. பால் பண்ணையில் நாங்கள் இறங்கிக் கொள்ள, பஞ்சப்பூரை நோக்கி விரைந்தது அந்தப் பேருந்து.
தொடரும்
ஊரான்

No comments:
Post a Comment