மனித இனவிருத்திக்கு அடிப்படையாக இருக்கும் மாதவிடாயைத் தீட்டு எனக் கருதுவது மாதர்களுக்கு இழைக்கும் அநீதி என சனாதன தர்மத்திற்கு எதிராக, 1500 ஆண்டுகளுக்கு முன்பே சிவவாக்கிய சித்தர் பாடியதுகூடவா நவீன கால பாரதிக்குத் தெரியாமல் போனது?
பாரதிக்கு இதெல்லாம் தெரியும், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என மாதவிடாய் குறித்து குறிப்பாகப் பாடினால் அது சனாதனத்திற்கே ஆப்பு என்பதனால்தான் பொதுவாகப் பாடுகிறான் பாரதி. ஒருவேளை, அவன் பாடியிருந்தால் ஆர்.எஸ்.எஸ்காரன் இன்று பாரதிக்கு விழா எடுப்பானா?
மாதவிடாயைக் காரணம் காட்டி பெண்களை முடக்க சனாதனிகள் என்னதான் முயன்றாலும், அதை எல்லாம் தமது பீச்சாங் கையால் புறந்தள்ளிவிட்டு, கல்வி நிலையங்களை நோக்கிப் புற்றீசல் போல படையெடுக்கின்றனர் மகளிர்.
படிப்பை முடித்துவிட்டு, பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக,
மருத்துவமனைகளில் செவிலியர்களாக, மருத்துவர்களாக, மருந்தாளுனர்களாக,
ஆலைகளில் பிட்டர்களாக, வெல்டர்களாக, எலக்ட்ரீசியன்களாக, பொறியாளர்களாக,
மனிதவள அதிகாரிகளாக,
விமானங்களில் விமானப் பணிப்பெண்களாக, விமானிகளாக,
வங்கிகளில் வங்கிப் பணியாளர்களாக,
விற்பனை நிலையங்களில், கடைகளில் விற்பனையாளர்களாக,
நீதித்துறையில் வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக,
அரசுத் துறைகளில் காவலர்களாக, அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்களாக எனப் பெண்கள் சகல துறைகளிலும் வியாபித்திருக்கின்றனர்.
1980 ஆம் ஆண்டு நிலவரப்படி,
உலகின் பத்தில் ஒரு பங்கு வருவாய், மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்கள் மூலமே ஈட்டப்படுகிறது. இன்று அது இன்னும் கூடுதலாகவே இருக்கும். பொதுவெளியில் உழைக்கின்ற அதே வேலையில் இவர்கள் வீட்டிலும் உழைக்க வேண்டியுள்ளது.
ஒரு மாட்டை இரண்டு முறை தோல் உரிப்பது போல, வெளியிலும் வீடுகளிலும் என பெண்கள் இரட்டிப்பு உழைப்பைச் செலுத்துகின்றனர். இப்படி உழைக்கும் பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாள், அதாவது மாதவிடாய் நாட்களில் ஓய்வு தேவை. இது மனித இனவிருத்திக்குத் அவசியான இயற்கையாய் நிகழும் ஒரு உயிரியல் தேவை (biological need).
அந்த மூன்று நாட்களில் கடும் குருதிப் போக்கு ஏற்படுவதால் குமட்டல், காய்ச்சல், பலவீனம், களைப்பு, அடிவயிற்றில் தசைப்பிடிப்பு (cramp), தாங்கொனா வலி, கவன இழப்பு என அவர்கள் படும் துன்பம் மாரடைப்பைப் போன்றது. Mensuration pain is as bad as having a heart attack.
இந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு தரவில்லை என்றால், அது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 ன் கீழ், அவர்களின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகும். எனவே வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது சட்டப்படியும், இயற்கை நீதி நியாயத்தின்படியும், உயிரியல் தேவையின்படியும் அவசியமான ஒன்றாகும்.
உலகின் அநேக நாடுகள் இந்தத் தேவையை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது இதை உணர்ந்த சில நாடுகள், குறிப்பாக தைவான், தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நாடுகள் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்குகின்றன. இத்தாலியில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு கிடப்பில் போடப்பட்டு விட்டது. லண்டனில் ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் விடுப்பு வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகாரில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு நாள் மாதவிடாய்க்கு என சிறப்பு சாதாரண விடுப்பு (Special asual Leave) 1992 முதல் வழங்கப்பட்டு வருகிறது. கேரளாவில் முன்பு பல்கலைக்கழக மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் கால விடுப்பு, தற்போது பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
18 வயது முதல் 52 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ஒரு நாள், அதாவது ஆண்டுக்கு 12 நாள் மாதவிடாய் கால விடுப்பு வழங்க வேண்டும் என்று 2025 நவம்பர் மாதத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு. இந்த விடுப்புக்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளன சில நிறுவனங்கள்.
மாதவிடாய் கால விடுப்பின் அவசியத்தை வலியுறுத்தி 2017, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றக் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டு விட்டன.
மாதவிடாய் காலத்தில் விடுப்பு தராமல் பெண்களிடம் வேலை வாங்குவது, பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 ன் கீழ் அது ஒரு துன்புறுத்தலாக
கருதப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15(3)-இன் படி மகளிருக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வழிவகை இருந்தும்,
இதுவரை மாதவிடாய் விடுப்பு தொடர்பாக இந்தியாவில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.
நேற்று வரை நடைமுறையில் இருந்து வந்த தொழிற்சாலைகள் சட்டத்திலும் (The Factories Act, 1948), தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமான, "பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பிலும்,” (Occupational Safety, Health and Working Conditions Code, 2020), உழைக்கும் மகளிருக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது குறித்து எதுவும் பேசப்படவில்லை.
44 தொழிலாளர் நல சட்டங்களில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு உரிமைகளைப் பறிக்கத் தெரிந்த அரசுக்கு, 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாடிய பாரதிக்கு விழா எடுக்கத் தெரிந்தவர்களுக்கு, மாதர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்க வேண்டும் என்று தோன்றவில்லையே?
எப்படித் தோன்றும், அவர்கள்தான் மாதவிடாயைத் தீட்டு என்று மாதர் தம்மை இழிவுபடுத்தும் ஈனப்பிறவிகளாச்சே?
ஊரான்
தொடர்புடைய பதிவு
.jpeg)
No comments:
Post a Comment