Thursday, December 18, 2025

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தினானா பாரதி....?

சூத்திரர்களைப் போல மகளிரும் இழிவானவர்கள் என்பதனால், அவர்களுக்கு வேதம் படிக்கவோ, ஓதவோ, உபநயனம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாது என அவர்களை ஒதுக்கி வைத்து (மனு: 2-66),

பூப்பெய்துவதற்கு முன்னரும், எட்டு வயதுக்கு முன்னரும்கூட, பெண்களுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என தந்தைக்குக் கட்டளையிட்டு, குழந்தைத் திருமணத்தை ஊக்கப்படுத்தி (மனு:9-4, 9-88),

30 வயது ஆண் 12 வயது பெண்ணையும், 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என பொருந்தாத் திருமணத்தை நியாயப்படுத்தி (மனு: 9-94),

தந்தை யாரைக் காட்டுகிறானோ, அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனையே தன் இணையராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என மகளிருக்குக் கட்டளையிட்டு (மனு:5-151),


நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனால், அவனது அண்ணனையோ அல்லது தம்பியையோதான் அந்தப்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாதரை விற்பனைப் பொருளாக்கி (மனு:9-69),

பெண்கள் தனது வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என வீட்டுச் சிறையில் அவர்களை அடைத்து வைத்து (மனு:9-13),

படுக்கையும், அலங்காரமும், காமமும், கோபமும், பொய்யும், துரோகமும்தான் மாதரின் குணம் என மாதரை இழிவுபடுத்தி (மனு:9-17),

மாதர்களுக்கு விபச்சாரிகள் என பட்டம் சூட்டி அசிங்கப்படுத்தி (மனு:9-19),

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் (மனு: 5-150), பிள்ளைகளைப் பெற்று காப்பாற்றுவதும், விருந்தினர்களை உபசரிப்பதும்தான் பெண்களுக்கான வேலைகள் என வீட்டிற்குள்ளும் அடுப்படியிலும் மாதர்களை முடக்கி வைத்து (மனு:9-27),

தனது கணவன் சூதாடியாகவோ, குடிகாரனாகவோ, நோயாளியாகவோ இருந்தாலும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டு (மனு:9-78), தனது கணவன் ஒழுக்கம் கெட்டவனாகவோ, பெண் பித்தனாகவோ, தீயொழுக்கம் உள்ளவனாகவோ இருந்தாலும், 'கணவனே கண்கண்ட தெய்வமாக' எண்ணி அவனை பூசிப்பதும் (மனு: 5-154), கணவன் சொற்படி (மனு: 9-30) வாழ்வதும்தான் பெண்ணுக்கு அழகு என உபதேசித்து (மனு:5-154),

தனது கணவன் மூலம் பிள்ளைப் பேறு இல்லை என்றால், அடுத்தவர்களோடு படுத்தும்கூட பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாதர் தம்மைக் கூட்டிக் கொடுத்து (மனு:9-58, 59),

இனவிருத்திக்கு அடிப்படையாக விளங்கும் மாதவிடாயைத் தீட்டு எனவும், முதல் மாதவிடாயின்போது அத்தீட்டைக் கழிக்க பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் மாதர் தம்மை இழிவு படுத்தி  (மனு:3-46),

மாதவிடாய் ஆனவளைத் தொட்டால் தீட்டு எனவும் (மனு:3-46, 5-85),  பிறருடன் பேசக்கூடாது (மனு:4-57), மாதவிடாய் ஆனவளுக்குப் போட்டு மீந்த உணவை உண்ணக்கூடாது (மனு: 4-208), சமைக்கக்கூடாது என மாதவிடாய் ஆனவளை வீட்டுக்கு வெளியே விரட்டி விட்டு, 

கர்ப்பமும் தீட்டுதான் என வளைகாப்பு என்ற பெயரில் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சி நடத்தி, வாரிசுகளைச் சுமக்கும் மாதரை அசிங்கப்படுத்தி (மனு:2-27),

பிள்ளை பேரும் தீட்டுதான் (மனு: 5-85) எனவும், பிள்ளை பெற்றவள் சமைத்த உணவை உண்ணக்கூடாது எனவும் தாய்மையை இழிவுபடுத்தி (மனு:4-212),

தனது இணையை இழந்த ஒரு ஆண் மறுமணம் செய்து கொள்ளலாம் (மனு: 5-169), ஆனால் தனது கணவனை இழந்த ஒரு பெண் கைம்பெண்ணாகவே அதாவது தனது இறுதி மூச்சுவரை விதவையாகவே வாழ வேண்டும் என விதி வகுத்து (மனு: 5-157, 158, 162),

பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது, அவர்கள் தங்களது இறுதி மூச்சுவரை கணவனையோ, மகனையோ நம்பித்தான் வாழவேண்டும் என அண்டிப் பிழைக்கும் நிலைக்கு மாதர்தம்மை  தள்ளி வைத்து (மனு: 5-148), 9-3)

என விதி வகுத்தவர்கள் ஆரியர்கள்‌.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்; ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!”

எனப்பாடிய 'பன்மொழி வித்தகன்' பாரதியின் கண்களுக்கு, மாதர் தம்மை இழிவு செய்யும் வேதங்களும், சாஸ்திரங்களும் தெரியாமல் போனது ஏனோ? 

மேற்கண்டவற்றை பாரதி பாடிச் சாடவில்லை என்றாலும்,

ஆண்களின் திருமண வயது 21 எனவும், பெண்களின் திருமண வயது 18 எனவும் நிர்ணயித்து 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி குழந்தைத் திருமண தடைச் சட்டம் கொண்டு வந்து மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைக்கு முடிவு கட்டினான் ஆங்கிலேயன்.

பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் முழங்கிய பெரியாரின் கோரிக்கை 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்குச் சொத்துரிமை, சட்ட வடிவம் பெற்று மாதர்தம்மை இழிவு செய்யும் மற்றொரு மடமை முடிவுக்கு வந்தது.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முன்னெடுப்பில், 1856 இல் கொண்டுவரப்பட்ட இந்து விதவைகள் மறுமணச் சட்டமும், 1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண  நிதியுதவித் திட்டமும், அரசு வேலைகளில் 30 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி அதை சட்டமாக்கி மாதர்தம்மை இழிவு செய்யும் மற்றும் சில மடமைகளுக்கு கலைஞர்தான் முடிவு கட்டினார். 

அன்று மட்டுமல்ல, இன்றும்கூட மாதர்தம்மை இழிவு செய்யும் எத்தனையோ மடமைகளைக் கொளுத்துபவர்கள் ‘வேத துவேஷிகள்தான்’ என்பதை பாரதியின் சீடர்கள் அறிவாரோ?

மாதர் தம்மை இழிவு செய்யும் வேதங்களை உயர்த்திப் பிடித்த பாரதியைப் போற்றுவதா, இல்லை மாதர்தன்மை இழிவு செய்யும் மடமைகளை வீழ்த்தும் 'வேத துவேஷிகளைப்' போற்றுவதா? 

தொடரும்

ஊரான்

No comments:

Post a Comment