உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும் அல்லது ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொண்டாலும் அல்லது சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டாலும், இத்திருமணங்கள் நல்ல நேரம், நல்ல நாள் பார்க்காமல், பார்ப்பன புரோகிதர்களை அழைக்காமல், சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்காமல், தாலி கட்டியோ அல்லது தாலி கட்டாமலோ நடைபெற்றால், அவை சீர்திருத்தத் திருமணங்கள் என்றோ அல்லது சுயமரியாதைத் திருமணங்கள் என்றோ சொல்வதுண்டு. சடங்கு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டாலும், பார்ப்பன புரோகிதரை அழைக்காமல் திருமணம் செய்தால் அதுவும் சுயமரியாதைத் திருமணம் என்றே கருதப்படுகிறது.
சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல், பார்ப்பன புரோகிதர் இல்லாமல், தாலி இல்லாமல் திருமணம் செய்து கொள்வதோடு, உறவுகளுக்கு இடையிலோ அல்லது ஒரே சாதிக்குள்ளேயோ அல்லது சாதி கடந்தோ நடைபெறும் திருமணங்களில், கம்யூனிசப் புரட்சிக்கு இணையர்கள் இணைந்து போராடுவது என்ற உறுதிமொழியோடு நடக்கின்ற திருமணங்களைப் புரட்சிகரத் திருமணங்கள் என்று சொல்வதுண்டு.
சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொண்டவர்கள்கூட சனாதனத்திற்கு எதிராகக் களப்பணி ஆற்றக் கூடியவர்களாக இருந்தாலும், அத்தகைய திருமணங்களை புரட்சிகரத் திருமணங்கள் என்று யாரும் சொல்வதில்லை.
சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்களும், புரட்சிகரத் திருமணம் செய்து கொள்பவர்களும் இயக்கம் சார்ந்து இருப்பதனால் அவர்களின் திருமணங்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதால் அவை பேசுபொருளாகின்றன.
இவைதவிர கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைத் தேடி வெளியூர் மற்றும் அயல்நாடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்ட பிறகு, சுயமரியாதை மற்றும் கம்யூனிசக் கொள்கைப் பிடிப்பு எதுவும் இல்லை என்றாலும், சாதி கடந்த காதல் திருமணங்கள் மிக அதிக அளவில் நடந்து வருகின்றன. இவர்களின் திருமண வடிவங்கள் புரோகித சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அகமண முறைக்கு எதிரான இவர்களின் புறமண முறை என்பது சாதிகளுக்கு இடையில் உடைப்பை ஏற்படுத்தும் புரட்சியாக இருந்தபோதிலும் இவை விளம்பரப்படுத்தப்படுவதில்லை.
சுயமரியாதை மற்றும் புரட்சிகரத் திருமணங்கள் செய்து கொண்ட எண்ணற்ற இணையர்கள் பிற்காலத்தில் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப்போவதும், புரட்சிகர நடைமுறைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதும் நடந்து கொண்டுதான் உள்ளன. அதே வேளையில் பிற்போக்கு முறையில் திருமணம் செய்து கொண்ட சில இணையர்கள் பிற்காலத்தில் புரட்சிகர நடைமுறையில் ஈடுபடுவதும் உண்டு. திருமண வடிவம் மட்டும் ஒருவரின் புரட்சிகர நடைமுறையை உறுதி செய்வதில்லை.
அண்மையில் நடைபெற்ற இரு இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த, இரு திருமணங்கள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. ‘சாதி மறுப்பு’ என்பதைத் தீவிரமாக முன்னிலைப்படுத்தி, ஒரு இயக்க வேலை போலவே இதை மேற்கொண்டனர்.
படிநிலை சாதி அமைப்பு முறையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இணையரில் ஒருவர் படி நிலையில், உயர்சாதியாகவோ அல்லது ஆதிக்கச் சாதியாகவோதான் இருக்க முடியும்.
எத்தனையோ சாதி மறுப்புத் திருமணங்கள், விளம்பரம் ஏதுமின்றி அன்றாடம் நடந்தேறி வருகின்றன இன்றைய காலத்தில், ஏதோ தாங்கள் உலகத்தில் அதிசயம் நிகழ்த்துவதைப் போல, 'சாதி மறுப்புத் திருமணம்' என்று சொல்லி, பிரபலங்களைத் தேடி ஓடி விளம்பரம் செய்வது அவசியமா என்று கேள்வி எழத்தான் செய்கிறது? கூடவே, இத்தகைய விளம்பரங்களில், ஏதோ ஒரு வகையில் ஆதிக்க சாதியின் ஈகியப் பெருங்குணம் ஒளிந்துள்ளதோ என்கிற ஐயமும் எழத்தான் செய்கிறது?
ஊரான்

No comments:
Post a Comment