Wednesday, October 1, 2025

நம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள்!

நண்பகல் 12 மணி. பொன்னை உருக்கும் புரட்டாசி வெயில். வெண்மேகங்கள் கதிரவனின் கதிர்களை ஓரளவுக்குத் தடுத்தாட்கொண்டதால் வெப்பம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஊருக்குப் புறப்பட ஆயத்தமாகி, ‘பர்சைப்’ பார்த்தேன். இரண்டு இருபது ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்தன. ‘திருப்பத்தூர் நகரப் பேருந்து நிலையம்தானே செல்கிறோம்; 'ஏடிஎம்' இல் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையோடு ஒரு இருபது ரூபாய் தாளைக் கொடுத்து 'ஷேர் ஆட்டோவில்' பேருந்து நிலையம் சென்றடைந்தேன்.

ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் மாவட்டத் தலைநகரின் பேருந்து நிலையம் அது. முதுகில் ஒரு 'ஏர்பேக்' தொங்க, கையில் ஒரு கட்டை பை சுமையுடன் 'ஏடிஎம்'ஐத் தேடினேன்; ஏமாற்றம்தான் மிஞ்சியது. விசாரித்தபோது வெளியில் உள்ளது என்றார்கள். 


கட்டை பையின் சுமை என்னை ஒரு பக்கம் இழுக்க, அதை சமாளித்துக் கொண்டு, இருநூறு மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு 'ஏடிஎம்' இல் உள்ளே நுழைந்த போது, ஒரு சிலர் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். வெளியே வந்தவர்கள், 'பணம் இல்லை' எனச் சொல்லியிருந்தால் உள்ளே சென்றிருக்கவே மாட்டேன். இத்தகையப் பண்புதான் இன்று இற்று வருகிறதே!

வேறு 'ஏடிஎம்' ஐ தேடிச் செல்ல வேண்டும் என்றால், எந்தப் பக்கம் சென்றாலும் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். கையில் உள்ள சுமையையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது என்பதால், அருகில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில், அங்கு வந்து நின்ற ஓரிரு அரசுப் பேருந்துகளில் ‘'ஃபோன்பே' வசதி உண்டா’ எனக் கேட்டேன். ‘நம்பிக்கைதானே சார் வாழ்க்கை!’ என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம்தானே? நான் மட்டும் நம்பிக்கை கொள்ளக்கூடாதா என்ன?

இதற்கிடையில், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து 'ஃபோன்பே' வசதி உள்ள எனது வங்கிக் கணக்கிற்கு பண மாற்றம் செய்து விட்டு, 'ஃபோன்பே' வசதி உள்ள ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஆனால், பணம் மட்டும் எனது கணக்கிற்கு இன்னமும் மாறவில்லை. ‘ஒரு ஐந்து நிமிடம்’ என நடத்துநரிடம் சொல்லிவிட்டு, பணம் வந்து விட்டதா எனத் திரும்பத் திரும்ப கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

நான் அனுப்பிய பணம் மாறும் என்று இனியும் காத்திருப்பது உசிதமல்ல என்பதனால், உறவினருக்குத் தெரிவிக்க, அவர் :ஜிபே' மூலம் பணம் அனுப்ப, அதுவும் உடனடியாக மாறவில்லை. நடத்துநர் என்னைப் பார்க்க, பணம் வந்து விட்டதா என நான் கைப்பேசியைப் பார்க்க, அதற்குள் ஜோலார்பேட்டையும் வந்துவிட்டது. 

‘வங்கிக்குப் பணம் மாறினால் சமாளித்துக் கொள்ளலாம், இல்லையென்றால் அடுத்த ஊரில் இறங்கிவிடலாம்’ என்ற முடிவோடு நடத்துநர் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே, நானே முந்திக்கொண்டு, ‘வாணியம்பாடிக்கு எவ்வளவு?’ என்று கேட்டேன். 20 என்றார். கையில் இருந்த 20 ரூபாயைக் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன். 

'பர்சும்' காலி, 'ஃபோன்பே'வும் காலி என்றால், யாராக இருந்தாலும் படபடப்பு ஏற்படத்தானே செய்யும். நான் இங்கே நம்பிக்கை வைத்தது 'டிஜிட்டல்' பணப் பரிமாற்றத்தின் மீது. அது எனது தரப்பு நம்பிக்கைதானே ஒழிய, அதற்கு, கைப்பேசி 'சிக்னலும்', இரு வங்கிகளின் 'சர்வர்களும்' சரியாக இருக்க வேண்டும் அல்லவா? 

கைப்பேசி 'சிக்கனல்' பலவீனமாக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், 'சர்வர்களின்' நிலையை நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இங்கே எனது நம்பிக்கை ஈடேறவேண்டுமானால், எதன் மீது நான் நம்பிக்கை வைக்கிறேனோ, அதைப்பற்றி நான் அறிந்திருக்க வேண்டும். இந்தப் புரிதல் இல்லை என்றால், ‘நம்பிக்கை நாசமாப் போச்சு!’ என விரக்தியில்தான் விழவேண்டிவரும். 

நான் அவசரமாகப் போக வேண்டியத் தேவை எதுவும் இல்லை. ‘பணம் வங்கிக்கு மாறினால் பயணத்தைத் தொடருவோம், இல்லை என்றால் வாணியம்பாடியில் இறங்கி, பணம் மாறும்வரை காத்திருப்போம் அல்லது அங்கே, அருகில் ஏதாவது 'ஏடிஎம்' இருந்தால் பணம் எடுத்துக் கொண்டு பயணிப்போம்’ என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால்  இதற்காக நான் சோர்ந்து விடவில்லை.
***
தேர்வுகளில் தேர்ச்சி பெற, படித்தபின் விரும்பிய வேலை கிடைக்க, அவசரத் தேவைக்குக் கடன் பெற, நிலம் வீடு என ஆசைப்படும் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்க, உறவுக்காரப் பெண்ணை மணம் முடிக்க, பருவம் பொய்க்காமல் மழை பொழிய, நல்ல விளைச்சல் கிடைக்க, செய்யும் தொழிலில் இலாபம் ஈட்ட என இவற்றையெல்லாம் பெறுவதற்காக, அடைவதற்காக பிறர் மீதும், பிறவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளாத மனிதன் இருக்க முடியாதுதானே?

நமது நம்பிக்கைகள் ஈடேற வேண்டுமானால், நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது; மாறாக, நாம் எதை, எவற்றை, யாரை நம்புகிறோமோ, அந்தத் தரப்பின் நிலையையும் புரிந்து கொண்டால், ‘நமது நம்பிக்கைகள் வீண் போய்விட்டன’ என்று துவண்டு விடாமல் அடுத்தடுத்த செயலுக்கு ஆயத்தமாவோம். 

போதிய காரணம் இன்றி, ஒருவர் ஒன்றை நம்புவதை, பொதுவாகப் பார்க்கும் போது, அது ‘நம்பிக்கையின் இயல்பாகவே’ உள்ளது. இந்த இயல்பு காரணமாகத்தான், பலரும் கடவுள் உள்ளிட்ட சிலவற்றின் மீது நம்பிக்கை (faith) கொள்கின்றனர். ஆனால், ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன்மீது வைக்கும் நம்பிக்கை (belief) என்பதே சரியான நம்பிக்கையாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். மேலும், ஒன்றைப் பற்றிய விவரங்கள் தெரியத் தெரிய, அதன்கூடவே, அதன் மீதான நம்பிக்கையும் மாறவே செய்யும்.

இருதரப்பு நம்பிக்கைகளும் ஒன்றுபடும்போது வேண்டுமானால் நம்பிக்கைகள் ஈடேறலாம். மற்றொரு தரப்பு என்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நான் நம்புவதால் மட்டுமே எனது நம்பிக்கை ஈடேறும் என்று எதிர்பார்ப்பது கானல் நீரே!

நம்பிக்கை குறித்த இத்தகையப் புரிதல் இல்லாததால், ‘ரொம்ப நம்பினேம்பா, ஏமாத்திட்டாம்பா! துரோகம் பண்ணிட்டாம்பா!’ என்று பேசுவோர் பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள், எதை நம்புகிறார்களோ அதைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம். இத்தகையோரை, ‘நம்பிக்கையை மட்டுமே நம்புபவர்கள்’ (believing the belief) எனக் கருதலாம். நடிகர் விஜய் மீதான நம்பிக்கையும் இத்தகையதே! இத்தகைய நம்பிக்கைகளில் எல்லாம் கடைசியில் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சி நிற்கும். 
***
பெங்களூர் புறவழிச்சாலை மூங்கில் 'சர்க்கிள்' நெருங்கியபோது உறவினர் அனுப்பிய பணம் வந்து விட்டதை உறுதி செய்து கொண்டேன். ஆனால், நான் அனுப்பிய பணம் மட்டும் இன்னும் மாறவில்லை. 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு, அதே பேருந்தில் வேலூருக்குப் பயணமானேன். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன், உள்ளேயே இருந்த ஒரு 'ஏடிஎம்’ இல் 'கார்டைச்' சொருகி எனக்குத் தேவையான அளவு 100 ரூபாய் தாள்களுடன் பணத்தைப் எடுத்துக்கொண்டு இல்லம் இருக்கும் வாலாஜா நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஊரான்
29.09.2025

Wednesday, September 24, 2025

மைசூர்பாகில் மிதக்கும் கோவை!

ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு, கோவையில் ஸ்வீட் விலை மளமளவென சரிந்துவிட்டதால், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஸ்வீட் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், அங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விலை குறைவு என்பதால், மக்கள் மூன்று வேளையும் ஸ்வீட்டை மட்டுமே தின்பதால் காய்கறி, மளிகை சாமான், பழக்கடைகள் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் ஒருபக்கம் கவலையடைந்துள்ளனராம்.

கோப்பு படம்

மைசூர்பாகை மூன்று வேலையும் தின்பதால், தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், மக்கள் நலனைவிட வியாபாரிகள் நலன் பெரிதல்ல என்பதால், அது பற்றிக் கவலைப்படாமல், எல்லோரும் ஸ்வீட் வாங்கித் தின்று, 'டாடி'க்கு நன்றி கூறி, இன்புற்றிருக்க வேண்டும் என  இனிப்பு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதாகவும் கோவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

விலை மலிவு என்பதால் ஒரு வாரத்துக்குத் தேவையான இனிப்புகளை மொத்தமாக வாங்கிச் செல்ல மக்கள் முயல்வதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோவுக்கு மேல் தரக்கூடாது என ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒருவர்தான் ஸ்வீட் வாங்க வர வேண்டும் என்றும், வரும் போது குடும்ப அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து கோவையை நோக்கி மக்கள் படையெடுப்பதால், மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் கோவைக்கு எதற்காகச் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அனுமதியைக் கட்டுப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஸ்வீட் ஸ்டால்களில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்து, இனி 'அடுத்த முறையும் தாம்தான் சட்டமன்ற உறுப்பினர்' என்ற மகிழ்ச்சியில் வானதி திளைத்திருப்பதாகவும், தனது மகிழ்ச்சியை மக்களிடையே மைசூர்பாகுடன் பரிமாறிக்கொள்ளும் வேளையில், அதைத் தடுக்க திமுக அரசு சதி செய்வதாகவும் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

எது எப்படியோ, ஜிஎஸ்டி குறைப்பால் கோவை மக்கள் இனிப்பில் மிதக்கிறார்கள். எனக்குகூட கோவை செல்ல ஆசை வந்துவிட்டது. கோவை செல்ல அனுமதி எங்கே வாங்க வேண்டும், வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு ஸ்வீட் கிடைக்குமா என்பதைத் தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன். 

ஊரான்

Wednesday, September 17, 2025

இந்தியா ஆன்மீக நாடா? நாத்திக நாடா?

கடவுள் இல்லை என்று கூறுபவன்தான் நாத்திகன் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவனும் நாத்திகனாக இருக்க முடியுமா என்று கேட்டால், ஆம் இருக்க முடியும் என்பதே பதில்.

வேதங்கள் பிழையற்றவை என்று நம்புகிறவன் எவனோ, வேதங்களின் மேலாண்மையை ஒப்புக் கொள்கிறவன் எவனோ அவன் மட்டுமே ஆத்திகன் என்கிறது இந்து மதத்தத்துவம். இவன்தான் சனாதனி என்று அறியப்படுபவன். மனுதர்ம சாஸ்திரமே இவனுக்கான உந்து சக்தி. 


இதற்கு நேர் மாறாக, எவன் ஒருவன் வேதங்களை மறுக்கிறானோ, வேதங்களை நிந்தனை செய்கிறானோ, அவனை நாத்திகன் என்கிறது இந்து மதத் தத்துவம்.

ஆகவே, இந்துமத வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சைவர்கள், பகுத்தறிவாளர்கள், பொதுவுடமைவாதிகள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாத்திகர்கள்தான். வேதங்களை ஏற்றுக் கொள்ளாத பட்டைபோட்ட பக்திமான்கூட நாத்திகனே; நமது தோழனே!

ஆத்திகமே இந்தியாவில் பலம் வாய்ந்தது என சனாதனவாதிகள் பெருமை பேசுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல; இந்தியாவில் பெருமான்மையினர் நாத்திகர்களே என்று நாமும் உரத்துக் குரல் எழுப்புவோம்!

தகவல் ஆதாரம்:  இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்: தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

ஊரான்

Thursday, August 21, 2025

மோடியும் முக்கால்னா பிரச்சனையும்!

"இந்தப் படத்தில் மோடிக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பூனாவை சேர்ந்த யோகேஷ் சித்தார்த்தாவும் அவரது மனைவி சுமீதா சித்தார்த்தாவும். அவர்களைப் பாராட்டுவதற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் மோடி. மோடியே தனது வீட்டிற்கு அழைக்கிற அளவுக்கு அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?


யோகேஷ் சித்தார்த்தா ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரியாம். அவர் பணியாற்றிய காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்றார்களாம்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக  யோகேஷ் சித்தார்த்தா யோசித்தாராம். தனது மொத்த சேமிப்பு பணத்தையும் வைத்திருந்த எல்லா நகைகளையும் தனது சொந்த வீட்டையும் விற்று ரூபா 1.25 கோடி செலவில் சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைத்தாராம். 

இதன் விளைவாக சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம். 

பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். அரிய இந்தச் சேவையை செய்த சித்தார்த்தாவும் சுமீதா சித்தார்த்தாவும் அமைதியாக இருக்கிறார்களாம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமாம்.
 
சல்யூட் டு யூ சார்!"

இப்படி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 
மூளையை மொத்தமாகக் கழட்டி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஏதோ மிகப்பெரிய தியாகம் அர்ப்பணிப்பு போலத் தோன்றும். 

ஆனால் யு.கே.ஜி அளவுக்கு யோசித்துப் பாருங்கள்,  

"சல்யூட் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது பற்றி யோகேஷ் சித்தார்த்தாவுக்குத் தெரிந்தது, நாட்டை ஆளும் மோடிக்குத் தெரியாமல் போனது எப்படி? இலட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்தால் தனது வீரர்களைக் காக்க ஒரு ஒன்னேகால் கோடி ரூபாயை இதற்கு ஒதுக்க முடியாதா?"

இந்த முக்கால்னா பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற மோடி, அவ்விருவரையும் அழைத்துப் பாராட்டுவது அவருக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?"
என்றுதானே கேட்கத் தோன்றும்!

ஊரான்

Sunday, August 17, 2025

கோனேரி கோனும் கேனக் கிறுக்கன்களும்!

'கோன்' ஐ கோனாராக்கி, 'கோனேரி கோன் கோட்டை'யை மீட்கக் கிளம்பி இருக்கிறான் ஒரு கேனன். இந்த கேனனுக்குப் பின்னால் விசில் அடித்துக் கொண்டே பலநூறு கேனன்கள்.

யார் சொன்னது தமிழ்நாடு முன்னேறி விட்டது என்று? இல்லை இல்லை இது வடநாடுதான் என்பதை தம்பிகள் மீண்டும் மீண்டும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செஞ்சிக்கோட்டை 

செஞ்சிக்கோட்டையை கட்டியதோடு அதை ஆண்ட எத்தனையோ கோன்கள் இருக்கும்போது கோனேரி கோனை மட்டுமே இவன் தூக்கிக் கொண்டு திரிவது ஏன்? 

உலகப் பாரம்பரிய சின்னமாக அண்மைய யுனெஸ்கோ அங்கீகாரத்துடன் செஞ்சிக் கோட்டை அது பாட்டுக்குக் கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், போகிறார்கள். 

இந்தக் கோட்டையை இவன் யாரிடமிருந்து மீட்கப் போகிறான்? வெள்ளைக்காரன் போய்விட்டான் என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுதலை நாள் கொடியேறினார்கள். ஒருவேளை முகலாயர்களோ, ராஜபுத்திரர்களோ,
நாயக்கர்களோ, மராட்டியர்களோ, நவாபுகளோ மாறுவேடம் பூண்டு மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக கோட்டையைக் கைப்பற்றி விட்டார்களா என்ன? 

எவனாக இருந்தாலும் இருபது ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு எட்டு மணிக்குக் கோட்டைக்குள் நுழைந்தால் ஐந்து மணிக்கு வெளியே வந்து விட வேண்டும்.‌ தம்பிகள் வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் பாறைகளுக்கு பின்னால் கள்ளுண்டு கவிழ்ந்து கிடக்க வாய்ப்பு உண்டே ஒழிய ஒருவனும் கோட்டைக்குள் இருக்க முடியாது. இந்தத் தம்பிகளை கோட்டையில் இருந்து மீட்கக் குரல் கொடுத்தாலாவது அதில் ஒரு நியாயம் இருக்கும். 

கோனேரி கோனை மீட்பதற்கான உனது குரலும், அயோத்தியையும் மதுராவையும் வாரணாசியையும் திருப்பரங்குன்றத்தையும் மீட்பதற்காகக் குரல் எழுப்பும் உனது சகலபாடிகளின் குரலும் சங்கமிக்கும் இடம் நாக்பூர்தான் என்பதை தமிழர்கள் உணராத வரை தமிழ்நாடு வடநாடாய் மாறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. 

ஊரான்

Thursday, July 24, 2025

நீத்தாரை நினைவுகூற நீ கொடுப்பது 'திதி'யா? இல்லை 'நிதி'யா?

நீர்நிலைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் திதி கொடுப்பதற்காக இன்று குவிந்திருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் இந்தச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இராமேஸ்வரத்தில் இன்று (24.07.2025)

நீர்நிலைகளுக்குச் சென்று பாக்கெட்டில் உள்ள பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, முன்னோர்களுக்குப் படையல் போட்டு அவர்கள் அதை உண்ண வருகிறார்களா என வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவதைவிட,

வீட்டிலேயே உறவினர்களை அழைத்து மறைந்த முன்னோர்களின் பிறந்த நாளிலோ அல்லது இறந்த நாளிலோ அவர்களின் நல்ல அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி திதிக்கு நிதியாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அறுசுவை உணவு உண்டால் நம் வயிறும் மனமும் நிறையுமே? 

மக்கள் மாற வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது மட்டும் புரிகிறது. வீட்டிலேயே படையல் போட்டுக்கொண்டால் நிதி பெறுவோர் சும்மா விடுவார்களா என்ன? வீட்டில் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விட்டால் அதையேக் காரணமாகக் காட்டி அச்சமூட்டி உங்களை நீர்நிலைகளை நோக்கி ஓட வைப்பார்கள். அதற்குப் பயந்து நீயும் நீர்நிலைகளை நோக்கி திதி கொடுக்க, 'சாரி' நிதி கொடுக்க ஓடினால் அந்த AI கூட உன்னைப் பார்த்துக் கெக்களிக்கும். 

'கற்றதனால் ஆய பயன்யென் கொல்', இந்தக் குறளில் கடவுளை வணங்காவிட்டால் நீ கற்ற கல்வியினால் என்ன பயன் என்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே வாலறிவனைக் கடவுளாக்கி விட்டார்கள். 

என்னைப் பொருத்தவரை இங்கே வாலறிவன் கடவுள் அல்ல, உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர். அவர்களைக் கைவிடாமல் உயிரோடு இருக்கும் போது பராமரி; இறந்த பிறகு அவர்களின் நல்ல பண்புகளை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல். அதற்காகவே அவர்களை பராமரி, வணங்கு, நினைவு கூறு என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

உயிரோடு இருக்கும்போது வாலறிவன்களை வதைப்படுத்தி, முதியோர் இல்லங்களில் சிறைப்படுத்தி அவர்கள் இறந்த பிறகு திதி கொடுப்பதால் என்ன பயன்? ஒருசிலர் பணம் கறக்க செய்த இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு வாலறிவன்களை உண்மையாகவே மதிக்கக் கற்றுக் கொள்வதே உனது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.
 
இனியும் நீர்நிலைகளை நோக்கி ஓடாதே! வாலறிவன்கள் உனது வீட்டிலும் உனது நெஞ்சத்திலும்தான் இருக்கிறார்கள். உனது பெற்றோர்களாகிய வாலறிவன்களுக்கு மரியாதை செலுத்த இடைத்தரகர்கள் எதற்கு? 

'திதி' என்ற பெயரில் 'நிதி' கொடுப்பதை உடனே நிறுத்து! இது கட்டளை! பெரியாரின் கட்டளை!

ஊரான்

Wednesday, July 9, 2025

பிண்டங்கள் ஜாக்கிரதை!

நேற்றுவரை ஏதோ சமூக நீதிக்காக அதிமுக செயல்பட்டது போலவும் அது இன்று எடப்பாடி போன்றோரால்  மதிப்பிழந்து போனதாகவும் சிலர் அங்கலாய்க்கின்றனர். சனாதனத்திற்கு எதிரான சிந்தனை கொண்டுள்ள ஒரு சில பகுத்தறிவு அதிமேதாவிகளும் இதில் அடங்குவர் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.  

சனாதன எதிர்ப்பில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கலைஞரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே சோ போன்ற பார்ப்பன 'அறிவாளி'களால் உருவாக்கப்பட்டதுதான் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக. எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிமுகவை பாதுகாத்து வந்தனர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சியானத் தலைவர்களாக இருந்ததனால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.

பிண்டம்

ஏற்கனவே பெரியார், அண்ணா இருவரின் திராவிடக் கருத்தியல் மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்களை நம்பவைப்பதற்காகவே திராவிடத்தையும் சமூக நீதியையும்  அரிதாரமாக அதிமுக அன்று பூசிக் கொண்டது என்பதைத் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை திராவிடம் மற்றும் சமூக நீதிக்கும் அதிமுகவுக்கும் எள்ளவும் தொடர்பில்லை. ‘திராவிடம்னா என்னன்னு படிச்சவங்களதான் கேட்கணும்’ என்று எடப்பாடி போட்டுடைத்த அன்றே அதிமுகவின் திராவிடம் அம்பலத்தில் ஏறியது. 

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பிழைப்புவாத தற்குறிகள் மட்டுமே. பதவி சொத்து சுகத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு எப்போதும் தேவைப்பட்டதில்லை. பதவிக்காக இவர்கள் மேசைக்கடியில் தவழ்ந்த காட்சிகளை தமிழகமே பார்த்து கெக்களித்தது. சசிகலாவிடமே இப்படி என்றால் ஜெயலலிதாவிடம் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

இன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுகவோ கலைஞர் வழியிலான ஸ்டாலினை வீழ்த்துவதற்கான ஆற்றலை இழந்துவிட்டதால் அது இனிமேலும் பார்ப்பனர்களுக்குத் தேவைப்படாத ஒரு அழுகிய பிண்டம். எனவே, தேவையில்லாத இந்தப் பிண்டத்தை அறுத்தெறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பிண்டத்தை ஒட்ட வைப்பதற்கு பார்ப்பனர்கள் முயல்கின்றனர். 

தாதுபுஷ்டி லேகியம் எல்லாம் கொடுத்து வத்திப்போன ‘பாட்சா’வின் பிண்டத்திற்கு பசை ஏற்ற பலமுறை முயன்றார்கள். ஆனால் அது பளபளப்பாவதற்குப் பதிலாக கடைசியில் உப்புகண்டமாய் உலர்ந்து போனது. 

வேறு பிண்டம் எதுவும் அப்போதைக்குக் கிட்டவில்லை. வேறு வழி இல்லாததால், தமிழ்நாட்டில் குறைப் பிரசவத்தால் நைந்து கிடக்கும் தங்களின் ‘டிமோ’ வின்  பிண்டத்திற்கு நாலுகால பூசை செய்து வேதமந்திரம் ஓதி 'அரோகரா' போட்டு உசுப்பிக்க முயல்கின்றனர். அதற்காக அக்காவையும் ஆட்டுக்குட்டியையும் இறக்கி வேலி தாண்டி மேய்ந்து வந்தாலாவது நைந்துபோன பிண்டத்தில் குருதி ஏறும் என்று எதிர்பார்த்தனர். வேலி தாண்டி ஆடு மேய்ந்ததே ஒழிய பிண்டம் பிதுங்கியதாகத் தெரியவில்லை. அக்காவும் எம்பி எம்பிப் பார்த்தது. எதிரில் இருந்தவர்களுக்கோ 'போடிய'த்திற்கு மேலே பரட்டைதான் தெரிந்ததே ஒழிய பிண்டம் தெரியவில்லை. 

குறைப் பிரசவம்  குறைப் பிரசவம்தான். நோஞ்சான் நோஞ்சான்தான். நைந்து போனது நைந்து போனதுதான். 

இனி இதை நம்பிப் பயனில்லை என்பதனால் கொஞ்சம் தசைப் பிடிப்பான மினுமினுப்பான ஒரு பிண்டத்தைக் கண்டெடுத்து புறவாசல் வழியாக பாலும் பழமும் ஊட்டி உசுப்பேற்றி வருகின்றனர். ஊட்டம் அதிகம் கிடைப்பதனால் இந்த சதைப் பிண்டமும் ‘கில்லி’யாய் துள்ளாட்டம் போட்டு வருகிறது. 

‘கில்லி’கள் திரையில் ஜொலிக்கலாம் ஆனால் நிஜத்தில்…?

பார்ப்போம்! 2026க்குப் பிறகு வேறு ஒரு பிண்டம் அவர்களுக்குத் தேவைப்படலாம்!

பிண்டங்கள் ஜாக்கிரதை!

ஊரான்

Tuesday, July 8, 2025

நூறு நாள் வேலை! ஆள் பற்றாக்குறை! அல்லாடும் அரசியல் கட்சிகள்!

‘நூறு நாள் வேலை கிடைக்கவில்லையா,  கவலையை விடுங்கள், நான் தருகிறேன்' என்று நூறு நாள் வேலையை கோவை வடவள்ளியில் இன்று எடப்பாடி அவர்கள் திறந்தவெளி வேனில் நின்று கொண்டே தொடங்கி வைத்திருக்கிறார். 


இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை, ஏற்கனவே மதுரை முருகன் மாநாட்டின் மூலமாக பாஜக தொடங்கி வைத்திருக்கிறது. திமுகவும் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தில்தான் பயணிக்க வேண்டும். மற்ற கட்சிகளால் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்துவது சற்றே சிரமம்தான். 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிகிற வரை இந்த நூறு நாள் வேலை தொடரும் என்பதனால் வரும் நாட்களில் இந்த வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அச்சம் இருக்காதா பின்ன? ஒரே நாளில் ஒரே இடத்தில் வேலை செய்வதற்கு இரண்டு மூன்று கட்சிகள் முண்டியடித்தால் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடுமே?

இந்த வேலைத் திட்டத்தில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், வேலை நடைபெறும் இடங்களில் அல்லக் 'கைகள்' நீளும் என்பதனால், அது இளம் பெண்களுக்கு  பாதுகாப்பற்றது என உளவுத்துறை  கருதுவதனால், நரைகண்ட ஔவைகளை மட்டுமே இந்த வேலைக்கு அழைத்துச் செல்லுமாறு காவல்துறை தரப்பிலிருந்து நூறு நாள் வேலைத் திட்ட ஏஜெண்டுகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 

வேலை செய்வதற்காக ஆறு ஏரி குளங்களுக்கோ வாய்க்கா வரப்புகளுக்கோ, மண்வெட்டி கொடுவா அறுவா அன்னக்கூடை என எதுவும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 
இந்த வேலை பெரும்பாலும் நகரங்களில் விஸ்தீரனமான வீதிகளிலும் மைதானங்களிலும் நடைபெறும் என்பதனால்
கொஞ்சம் மினுமினுப்பாகவே செல்லலாம்.  'வாழ்க' என கோஷமிட்டு கைதட்ட வேண்டும். இதுதான் உங்கள் ஒரே வேலை.

நூறு நாள் வேலை நடைபெறும் இடத்திற்கும் நீங்களாகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களாக வந்து வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் வேலை முடிந்து திரும்பும்போது சில மையங்களில் பிங்க் கலர் பஸ் வருவதற்காகக் காத்திருக்க வேண்டி நேரிடலாம். 

வேலையைத் தொடங்கி வைக்க விரைப்பான காலருடன் மினிஸ்டர் ஒயிட் முதலாளிமார்கள் மேடை ஏறுவார்கள். அவர்கள் மேடை ஏறி, எதற்காக இந்த நூறு நாள் வேலை என்பதைப் பற்றிக் கதைக்கத் தொடங்குவார்கள். அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் நைசாக அந்த வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத் தேட வேண்டும். அதற்கு ஏற்ப நீங்கள் எந்த லொகேஷனில் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

இரண்டு மணி நேர வேலைக்காக ஒரு சோத்துப் பொட்டலத்துடன் 500 ரூபாய் வரை பேட்டாவும் கிடைக்கும். ஏஜெண்டுகளின் கருணை உள்ளத்தைப் பொறுத்து சோத்துப் பொட்டலம் சில சமயம் கலவை சாதத்தையும் தாண்டி  சிக்கன் பிரியாணியாகக்கூட  இருக்கக்கூடும்.

இன்று அவர்கள் கொடுக்கும் பொட்டலத்தை நீங்கள் மடியில் கட்டினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் உங்களைப் பொட்டலம் கட்டுவார்கள்!

ஊரான்
08.07.2025

Monday, June 23, 2025

எடப்பாடியின் செவுளில் அறைந்த 'முருகனுக்கு அரோகரா'!

மதுரை முருக பக்த மாநாட்டில் அண்ணாவை இழிவுபடுத்தியக் காணொளி; மேடையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த அதிமுக தலைவர்கள். அண்ணாவை மட்டுமல்ல  திராவிடத்தையும் சேர்த்தே சங்கிகள் இழிவுபடுத்துவது ஒன்றும் அதிசயமல்ல.



அண்ணா பெயரிலும், திராவிடம் பெயரிலும் கட்சி நடத்தும் அதிமுக-காரனுக்கு இதெல்லாம் உரைக்கவில்லையா என திமுக, கம்யூனிஸ்ட், சிறுத்தைகள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 

திமுக-விலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டதே சங்கிகளின், அதாவது பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில்தான் என்பதை மறந்துவிட்டு, ஏதோ, அண்ணாவையும் திராவிடத்தையும் தாங்கிப் பிடிப்பதற்காகவே அதிமுக இருப்பதாக எண்ணுவோர்களுக்குத்தான்  மேற்கண்டவாறு கேள்விகள் எழும்.

பொதுவாக ஒரு கட்சியிலிருந்து  ஒரு பிரிவினர் வெளியேறும் போது புதிதாக ஒரு பெயரில் செயல்படுவதைவிட, ஏற்கனவே பிரபலமாக உள்ள, தான் செயல்பட்டக் கட்சிப் பெயரோடு ஒரு முன்னொட்டையோ அல்லது பின்னொட்டையோ சேர்த்துக்கொண்டு செயல்படுவதன் மூலம் மக்களிடம் சுலபமாக பரிச்சயமாக முடியும் என்பதற்காகத்தான் 'அண்ணா' என்ற முன்னொட்டைக் கொண்டு அதிமுக என்று தனது கட்சிக்கு நாமகரணம் சுட்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர்.  மற்றபடி எம்.ஜி.ஆர் தொடங்கியக் கட்சிக்கு
கொள்கை அடிப்படையில் அண்ணாவுக்கும் திராவிடத்திற்கும்  எந்தப் பிணைப்பும் கிடையாது.

எம்.ஜி.ஆருக்கோ அதன் பிறகான ஜெயலலிதாவுக்கோ திராவிடக் கருத்தியலில் எள்ளளவும் உடன்பாடில்லை என்றாலும், உடன்பாடு இருப்பது போலக் காட்டிக் கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அண்ணாவின் வாரிசுகள் போல நாடகமாடிய ஒரு நாடகக் கம்பெனிதான் அதிமுக. 

ஆனால், இவை எல்லாம் தெரிந்தும், தங்களின் சுய நலனுக்காக 'சமூகநீதி காத்த வீராங்கணை' என ஜெயலலிதாவுக்கு 'ஆசிரியரே' அரிதாரம் பூசியதால் அம்மையாரும், 'அண்ணா நாமம் வாழ்க' என வசனம் பேசி 'அம்மா'வாய் அவதாரம் எடுக்க முடிந்தது. 

தாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு பிழைப்புக்காக மண்டியிடும் எடுபிடிகளை இருவரும் திட்டமிட்டே வளர்த்தனர். அத்தகைய எடுபிடிகளின் எச்சங்கள்தான் இன்று அதிமுக-வில் எஞ்சி இருப்பவர்கள். அதன் உச்சபச்சம்தான் 'திராவிடம் என்றால் அது புராணம் படித்தவர்களுக்குத்தான் தெரியும்' என்கிற எடப்பாடியின் உளறல். அவர்களிடம் போய் அண்ணாவையும் திராவிடத்தையும் எதிர்பார்ப்பது நரகலில் நல்லரிசி தேடுவதாகும்.

அன்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டார்கள் என்றால், இன்று  சங்கிகளின் கட்டளைகளுக்கு அதிமுக எடுபிடிகள் அடிபணிகிறார்கள்.

எந்தக் கொள்கைப் பின்னணியும் இல்லாத, பிழைப்புவாத அதிமுக என்கிற பார்ப்பன அடிமைக் கூட்டம் முற்றிலுமாக அழிவதே இன்றைய உடனடி தேவை. முருக பக்த மாநாடு இதற்கு வித்திட்டது என்ற மகிழ்ச்சி அடைவோம்.  துரோகிகளைவிட எதிரிகளை எதிர்கொள்வது எளிதுதானே?

ஊரான்

Thursday, June 19, 2025

சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

கள் இறக்குவதன் மூலமாகத்தான் பனை தொழில் பாதுகாக்கப்படுமா? கள் இறக்கினால் தமிழ்நாடு ஓஹோவென்று உயர்ந்து விடுமா? பனையில் இருந்து வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் சாத்தியமில்லையா? 

பனை வெல்லம், கருப்பட்டி, இதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்? நொங்கு, பனங்கிழங்குகூட காசுதானே? சும்மாவா கிடைக்கிறது? பனம்பழம் அதன் கூழை ஏன் 'மார்க்கெட்டிங்' செய்யக்கூடாது? 

தென்னை, பயன்பாடு சொல்ல வேண்டியதில்லை. அது தரும் எல்லாமே பயன்தான். பிறகெதற்கு கள்?

கள்ளுண்ட கோமாளி

கள் வேண்டும் என்றால் ஈச்சமரம்கூட வளர்க்கலாமே?  மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதே இன்றைய தேவை.

கள்ளை எல்லோரும் குடிப்பதில்லை. குடிகாரர்கள் மட்டுமே பனை-தென்னை மரத்தடிகளில் தவம் கிடப்பார்கள். 
கள் ஒரு உணவு என்று பேசுபவன் மகா மடையன். கள் தேவை என்று கோருவது குடிகாரர்களின் கோரிக்கை.

எந்த ஒரு தொழிலிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள் உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. 

கள்ளில் ஆல்கஹால் அளவு குறைவு என்று பேசுபவர்களே? டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹாலின் அளவைக் குறைத்து விட்டால் அது போதைப்பொருள்  இல்லை என்று ஆகிவிடுமா? ஆல்கஹால் அது எந்த அளவில் இருந்தாலும் அதனால் போதை ஏறுகிறது என்றால் அதை ஆதரிப்பது மக்களுக்கு எதிரானதே!  மக்களுக்கு எதிரானதை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோதிகளே!

கள் இறக்கினால் ஒருசிலருக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கலாம்.
காசு பணம் கிடைக்கும் என்பதற்காகக் காமக்கிழத்தியாய் ஆக முடியுமா? 

ஒரு சிலருக்காக பலர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? பலருக்காக சிலர் விட்டுக் கொடுப்பதுதானே உலக நியதி!

சாராயம், கள்ளு, போதைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக, உடனடியாக ஒழிக்க முடியாது என்று சொல்வது கோழைத்தனத்தின் அல்லது இயலாமையின் அல்லது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. 

சாராயத்த உடனடியாக நிறுத்திவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் ஒரு சிலர் மாண்டு போகலாம் என்று உரைப்போரும் உண்டு. சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

ஊரான்

Sunday, June 1, 2025

தலைவனுக்காகக் காத்துக் கிடக்கும் தமிழ்நாடு!

“இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்”

என, கவிப்பித்தனின் “பிணங்களின் கதை” சிறுகதைத் தொகுப்பைப் வாசித்த பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் அவரின் “நீவாநதி” நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எனது அவாவை வெளிப்படுத்தி இருந்தேன்.


இந்த மாதத் தொடக்கத்தில், இரா.சுப்பிரமணி அவர்களின் “பெரியாரின் போர்க்களங்களைச்” சுற்றி வந்தபோது, இடையில்   ‘நீவாநதி’யில் இறங்கி நீந்தத் தொடங்கி, அது ஓடிய திசை எங்கும் நானும் ஓடி, நிரம்பி வழிந்த ஏரிகளில் முங்கி எழுந்து, சலசலக்கும் நெல் மணிகளை உரசிக் கொண்டு, பசுமை படர்ந்த வயல் வரப்புகளை விட்டேகி, கொல்லை மேடுகளின் கடலைச் செடிகளின் ஊடே மொச்சை வாசத்தில் மிதந்தவாறு, காடுகளில் ஆடுகளுடன் ஆட்டம் போட்டு, மாலையில் சுண்டி இழுத்தக் கருவாட்டுக் குழம்பில் களி உருண்டைகள் வயிற்றை நிரப்ப, அயர்ந்து உறங்கி காலைக் கடனைக் கழித்து, கால் கழுவ ஆற்றில் கைநீட்டிய போது, கானல் நீரில் விரல்கள் தணக்க, நெஞ்சு கனத்து, மீண்டும் “பெரியாரின் போர்க்களங்களில்” நுழையலானேன்.

பெரியாரின் போர்க்களங்கள் 

ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், சேரன்மாதேவி குருகுலத்தில் பாகுபாடு,  வைக்கம் போராட்டம்,  இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீட்டுக்கான வகுப்புரிமைப் போராட்டம், வடவர் சுரண்டல், இந்தித் திணிப்பு, பிள்ளையார் பொம்மை உடைப்பு,  தேசியக்கொடி எரிப்பு, இராமன் உருவ எரிப்பு, பிராமணாள் பெயர் அழிப்பு,  காந்திப்பட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு, இந்திய தேசப்பட எரிப்பு,  எருமைக்கிடா வெட்டுத் தடுப்பு,  கம்பராமாயணம் நூல் எரிப்பு, கோவில் கர்ப்பக்கிரக நுழைவு என எண்ணற்றப்  போர்க்களங்களின் ஊடே பயணித்து வெளியே வந்த பிறகு, நான் பார்த்ததை, உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
***
இது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய-திராவிட நெடும் போர். 1920-களில் 'அந்நிய வெள்ளையர்களுக்கு' எதிரான ஒத்துழையாமை இயக்கம் எனும் போர்க்களத்தில் நுழைந்த பெரியார், 1970-களில் 'இந்திய வெள்ளையர்களுக்கு' எதிரான கர்ப்பக்கிரக நுழைவு எனும் போர்க்களம் வரை எதிரிகளைக் கதறக் கதறத் துரத்தி இருக்கிறார். 

போர்க்களம் புகுமுன், போரின்  அவசியம் குறித்து ‘குடியரசு’விலும் ‘விடுதலை’யிலும் முன்கூட்டியே அறிவிப்பு செய்து, துண்டறிக்கைகள் மூலம்  போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தி, ஊர்ஊராய் கூட்டம் போட்டு அறைகூவல் விடுத்து, போராளிகளின் பட்டியலை முன்கூட்டியே உறுதி செய்து, வழக்காட வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்து, பொது மக்களுக்கோ பொது அமைதிக்கோ இடையூறு நேராமல்,
நூற்றுக் கணக்கில் பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் களம் இறக்கி, போர்க்களத்தில் முன்வரிசையில் தானே முன்நின்று, தான் மட்டுமன்றி தனது சகோதரி மற்றும் இணையரையும் இணைத்துக் கொண்டு, தடையை மீறி கைதானால் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் போர் நியாயமானது என நெஞ்சு நிமிர்த்தி, அபராதம் விதித்தாலும் அதைக் கட்ட‌மறுத்து சிறை புகுந்து, கல் உடைத்து, எண்ணற்றோர் உயிர் பலியானபோதும் துவளாமல், தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாகக் கருதி ஓய்வெடுக்காமல்,  அடுத்தடுத்து களம் கண்டு எதிரிகளை நிலைகுலைய வைத்தச் சுவடுகளே போர்க்களங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. 

மக்களிடையே நிலவும் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களும் அவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும், நம்மை அடக்கி ஆள்வதற்கு அரசியல் அதிகாரமும்  எதிரிகளிடம் ஏவுகணைகளாகவும், கேடயங்களாகவும் இருக்கும்வரை, எதிரிகளை முற்றிலுமாக வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒன்றியத்தில் இருந்து வெளியேறி நமக்கானதொரு தனி சட்டத்தை உருவாக்கிக் கொண்டு, நம்மை நாமே ஆளுகின்ற அதிகாரம் கொண்ட தன்னாட்சிதான் தீர்வு என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கியதை உணர முடிகிறது.

இந்தித் திணிப்பு, குலக்கல்விக்கான புதிய கல்விக் கொள்கை, நீட் போர்வையில் உயர்கல்வி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு-ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுப்பு,  ஆளுநர் மூலம் அதிகார முடக்கம் என எதிரிகளின் எண்ணற்ற ஏவுகணைகள் நம் மீது தொடர்ந்து ஏவப்படும் இன்றைய போர்க்களச் சூழலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இன்றைய கேள்வியாக எஞ்சி நிற்கிறது. 

வெறும் அறிக்கைகள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் எனும் அடையாளப் போராட்டங்களால் எதிரிகள்  அஞ்சுவதில்லை. இதன் விளைவு, ஆளுநர் என்ற பெயரில் ஒருவன் நம் மண்ணிலேயே நங்கூரமிட்டுக்கொண்டு, அய்யன் வள்ளுவனுக்கு காவிச் சாயம் பூசியதோடு, அய்யனை சனாதனக் காவலனாக்கி நம்மைப் பார்த்து கெக்களித்துக் கொண்டு திரிகிறான். 

இதுவே, பெரியாரின் காலம் என்றால் இந்த ஆட்டுத்தாடி தனது மாளிகையை விட்டு  ஓட்டம் பிடிக்கும் வரை ஆளுநர் மாளிகை அல்லவோ அன்றாடம் முற்றுகையிடப்பட்டிருக்கும்? 

செய்தித் தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி, பொருளாதார வசதி இல்லாத ஒரு காலத்தில், கல்வி அறிவு குன்றிய மக்களை இறுதி இலக்கு எட்டும்வரை பல்லாயிரக் கணக்கில் பெரியாரால் திரட்டிப் போராட முடிந்தது. கட்சி மாச்சரிங்களைக் கடந்து பெரியாரின் பின்னால் பலரும் அணிதிரளக் காரணம் அவர் மக்களுக்கான தலைவராய் உண்மையாய் உழைத்தார்; வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.

ஆனால், இன்று எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும், பத்து பேரைத் திரட்டுவதற்கே திண்டாடுகின்றன இயக்கங்கள். காரணம், பெரியாரைப் போன்று நம்பிக்கையான தலைவன் ஒருவனும் எந்த ஒரு கட்சியிலும், எந்த ஒரு இயக்கத்திலும் உருவாகவில்லை என்பதைத்தான் பெரியாரின் போர்க்களங்கள் புரிய வைக்கிறது.

பெரியாரைப் போன்று ஒரு மக்கள் தலைவன் உருவாகாதவரை எதிரிகளை ஒருபோதும் வீழ்த்த முடியாது. தலைவனுக்காக தமிழ்நாடு காத்துக் கிடக்கிறது!

ஊரான்

பெரியாரின் போர்க்களங்கள்
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை ரூ.500/-
தொடர்புக்கு: 044-24726408, 81229 46408.
web: www.karunchattaibooks.com

Saturday, May 31, 2025

இணை ஏற்பு: நாற்பதாம் ஆண்டு!

மே மாதம் 27 அன்று அகவை 67 முடிந்து 68 இல் அடி எடுத்து வைத்து, நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த போது, ஜூன் 1 (1986) எனது இல்வாழ்க்கை இணை ஏற்பு நாள் என்பதை நான்கு நாட்களுக்கு முன்பே, கல்லூரியில் எனது வலக்கரமாய் விளங்கிய இனிய நண்பன் ராஜன் சேக்ரி நினைவுபடுத்தினான். 

எமது இணை ஏற்பு விழா குறித்து "இராகு காலத்தில் இணை ஏற்பு!" என்ற தலைப்பில் ஏற்கனவே எதிர்த்து நில் வலைப்பூவில் எழுதிய பதிவு ஒன்றை கல்லூரிக் கால நண்பர்கள் குழுவில் பகிர்ந்திருந்தேன். 


"ஜுன் முதல் நாள்தான் என் பிறந்தநாள் மச்சி..
திருமணத்திற்கு நானும் வந்திருந்தேன்.. பசுமையான நினைவுகளாக இன்றும் உளப்பதிவில் உள்ளது"

என்று நினைவு கூர்ந்ததோடு,

"இராகு காலத்தில் என்பதை விட இரகு (பிறந்த) காலம் அன்று திருமணம் நடந்தது என்பதுதான் கூடுதல் சிறப்பு"

என்று நண்பன் இரகுநாதன் பதில் எழுதினான்.

அதற்கு நான்,

"இரகு இருக்கும் இடத்தில் இராகுவுக்கு என்ன வேலை?"

என்று பதில் எழுதினேன். 

உண்மைதானே? உற்ற நண்பர்களும், தோழர்களும், உறவுகளும் நம்மை அரவணைத்துக் காக்கும் போது 'இராகு'வெல்லாம் எம்மாத்திரம்?

காசு பணம் பொருளைவிட நேசக்கரம் நீட்டும் நட்புதானே நமது நினைவுகளை பசுமையாக்குகின்றன. உறவுகள்கூட சில பல காரணங்களுக்காக இடையில் அறுபடலாம், ஆனால் நட்பு, பூத்த நாள் முதல் உதிரும் இறுதி நாள் வரை வாடாமல் மிளிர்வதால்தானே வண்டுகள் வட்டமடிக்கின்றன.

சாதி மதம் பழக்க வழக்கம் வேறு வேறாயினும் ஒருசிலருக்கிடையில் நட்பு பூக்கிறதே எப்படி? பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகக் கேடுகளை விட்டொழித்து, உண்மை நேர்மை நியாயத்தைக் கைக்கொள்ளும் இடமே மாசற்ற நட்பு மிளிரும் இடம். 

ஒத்த உணர்ச்சிதான் நட்புக்கு அடிப்படை என்பதால், 
சிலசமயம் பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகம் என ஏதாவதொன்று ஒரு நண்பனை ஒட்டிக் கொண்டால் மறுகணமே அவனுடனான நட்பை வெட்டி விடுகிறோம். 

அதனால்தான், "ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது" 

என்று 13.04.2025 அன்று நடைபெற்ற எனது மகனின் இணைஏற்பு விழா குறித்து எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.

எமது இணை ஏற்பு விழா குறித்து "எதிர்த்து நில்" வலைப்பூவில் எழுதிய பதிவு கீழே இணைப்பில்.


நன்றி

பொன்.சேகர்
இணை ஏற்பு



































Thursday, May 29, 2025

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

அக்டோபர் 7, 2019 அன்று எழுதிய கட்டுரை. மீள் பதிவு.
****
ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.









மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.












“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்