Friday, December 19, 2025

பணியிட மகளிருக்கு மாதவிடாய் கால விடுப்பு ஏன் அவசியம்?

மனித இனவிருத்திக்கு அடிப்படையாக இருக்கும் மாதவிடாயைத் தீட்டு எனக் கருதுவது மகளிருக்கு இழைக்கும் அநீதி என சனாதன தர்மத்திற்கு எதிராக, 1500 ஆண்டுகளுக்கு முன்பே  சிவவாக்கிய சித்தர் பாடியதுகூடவா நவீன கால பாரதிக்குத் தெரியாமல் போனது? 

பாரதிக்கு இதெல்லாம் தெரியும், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என மாதவிடாய் குறித்து குறிப்பாகப் பாடினால் அது சனாதனத்திற்கே ஆப்பு என்பதனால்தான் பொதுவாகப் பாடுகிறான் பாரதி. ஒருவேளை, அவன் பாடியிருந்தால் ஆர்.எஸ்.எஸ்காரன் இன்று பாரதிக்கு விழா எடுப்பானா?


மாதவிடாயைக் காரணம் காட்டி மகளிரை முடக்க சனாதனிகள் என்னதான் முயன்றாலும், அதை எல்லாம் தமது பீச்சாங் கையால் புறந்தள்ளிவிட்டு, கல்வி நிலையங்களை நோக்கிப் புற்றீசல் போல படையெடுக்கின்றனர் மகளிர்.

படிப்பை முடித்துவிட்டு, பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியராக, பேராசிரியராக,

மருத்துவமனைகளில் செவிலியராக, மருத்துவராக, மருந்தாளுனராக, 

ஆலைகளில் பிட்டராக, வெல்டராக, எலக்ட்ரீசியனாக, பொறியாளராக, 
மனிதவள அதிகாரியாக, 

விமானங்களில் விமானப் பணிப்பெண்ணாக, விமானியாக, 

வங்கிகளில் வங்கிப் பணியாளராக,

விற்பனை நிலையங்களில், கடைகளில் விற்பனையாளராக,

நீதித்துறையில் வழக்கறிஞராக, நீதிபதியாக,

அரசுத் துறைகளில் காவலராக, அதிகாரியாக, மாவட்ட ஆட்சியராக என மகளிர் சகல துறைகளிலும் வியாபித்திருக்கின்றனர்.

1980 ஆம் ஆண்டு நிலவரப்படி,
உலகின் பத்தில் ஒரு பங்கு வருவாய், மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள மகளிர் மூலமே ஈட்டப்படுகிறது. இன்று அது இன்னும் கூடுதலாகவே இருக்கும். பொதுவெளியில் உழைக்கின்ற அதே வேலையில் இவர்கள் வீட்டிலும் உழைக்க வேண்டியுள்ளது. 

ஒரு மாட்டை இரண்டு முறை தோல் உரிப்பது போல, வெளியிலும் வீடுகளிலும் என மகளிர்  இரட்டிப்பு உழைப்பைச் செலுத்துகின்றனர். இப்படி உழைக்கும் மகளிருக்கு மாதத்தில் மூன்று நாள், அதாவது மாதவிடாய் நாட்களில் ஓய்வு தேவை. இது மனித இனவிருத்திக்குத் அவசியான இயற்கையாய் நிகழும் ஒரு உயிரியல் தேவை (biological need). 

அந்த மூன்று நாட்களில் கடும் குருதிப் போக்கு ஏற்படுவதால் குமட்டல், காய்ச்சல், பலவீனம், களைப்பு, அடிவயிற்றில் தசைப்பிடிப்பு (cramp), தாங்கொனா வலி, கவன இழப்பு என அவர்கள் படும் துன்பம் மாரடைப்பைப் போன்றது. Mensuration pain is as bad as having a heart attack. 

இந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு தரவில்லை என்றால், அது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 ன் கீழ், அவர்களின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகும். எனவே வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது சட்டப்படியும், இயற்கை நீதி நியாயத்தின்படியும், உயிரியல் தேவையின்படியும் அவசியமான ஒன்றாகும். 

உலகின் அநேக நாடுகள் இந்தத் தேவையை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது இதை உணர்ந்த சில நாடுகள், குறிப்பாக தைவான், தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே மகளிருக்கு  ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு  வழங்குகின்றன. இத்தாலியில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு கிடப்பில் போடப்பட்டு விட்டது. லண்டனில் ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகாரில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு நாள் மாதவிடாய்க்கு என சிறப்பு சாதாரண விடுப்பு (Special asual Leave) 1992 முதல் வழங்கப்பட்டு வருகிறது. கேரளாவில் முன்பு பல்கலைக்கழக மாணவியருக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் கால விடுப்பு, தற்போது பள்ளி மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

18 வயது முதல் 52 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ஒரு நாள், அதாவது ஆண்டுக்கு 12 நாள் மாதவிடாய் கால விடுப்பு வழங்க வேண்டும் என்று 2025 நவம்பர் மாதத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு. இந்த விடுப்புக்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளன சில நிறுவனங்கள்.

மாதவிடாய் கால விடுப்பின் அவசியத்தை வலியுறுத்தி 2017, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றக் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டு விட்டன.

மாதவிடாய் காலத்தில் விடுப்பு தராமல் மகளிரிடம் வேலை வாங்குவது, பணியிடங்களில் மகளிருக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 ன் கீழ் அது ஒரு துன்புறுத்தலாக 
கருதப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15(3)-இன் படி மகளிருக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வழிவகை இருந்தும், 

இதுவரை மாதவிடாய் விடுப்பு தொடர்பாக இந்தியாவில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. 

நேற்று வரை நடைமுறையில் இருந்து வந்த தொழிற்சாலைகள் சட்டத்திலும் (The Factories Act, 1948), தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமான, "பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பிலும், (Occupational Safety, Health and Working Conditions Code, 2020), உழைக்கும் மகளிருக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது குறித்து எதுவும் பேசப்படவில்லை.  

44 தொழிலாளர் நல சட்டங்களில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு உரிமைகளைப் பறிக்கத் தெரிந்த அரசுக்கு, 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாடிய பாரதிக்கு விழா எடுக்கத் தெரிந்தவர்களுக்கு, மகளிருக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்க வேண்டும் என்று தோன்றவில்லையே? 

எப்படித் தோன்றும், அவர்கள்தான் மாதவிடாயைத் தீட்டு என்று மாதர் தம்மை இழிவுபடுத்தும் ஈனப்பிறவிகளாச்சே?

ஊரான்

தொடர்புடைய பதிவு 


Thursday, December 18, 2025

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தினானா பாரதி....?

சூத்திரர்களைப் போல மகளிரும் இழிவானவர்கள் என்பதனால், அவர்களுக்கு வேதம் படிக்கவோ, ஓதவோ, உபநயனம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாது என அவர்களை ஒதுக்கி வைத்து (மனு: 2-66),

பூப்பெய்துவதற்கு முன்னரும், எட்டு வயதுக்கு முன்னரும்கூட, பெண்களுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என தந்தைக்குக் கட்டளையிட்டு, குழந்தைத் திருமணத்தை ஊக்கப்படுத்தி (மனு:9-4, 9-88),

30 வயது ஆண் 12 வயது பெண்ணையும், 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என பொருந்தாத் திருமணத்தை நியாயப்படுத்தி (மனு: 9-94),

தந்தை யாரைக் காட்டுகிறானோ, அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனையே தன் இணையராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என மகளிருக்குக் கட்டளையிட்டு (மனு:5-151),


நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனால், அவனது அண்ணனையோ அல்லது தம்பியையோதான் அந்தப்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாதரை விற்பனைப் பொருளாக்கி (மனு:9-69),

பெண்கள் தனது வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என வீட்டுச் சிறையில் அவர்களை அடைத்து வைத்து (மனு:9-13),

படுக்கையும், அலங்காரமும், காமமும், கோபமும், பொய்யும், துரோகமும்தான் மாதரின் குணம் என மாதரை இழிவுபடுத்தி (மனு:9-17),

மாதர்களுக்கு விபச்சாரிகள் என பட்டம் சூட்டி அசிங்கப்படுத்தி (மனு:9-19),

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் (மனு: 5-150), பிள்ளைகளைப் பெற்று காப்பாற்றுவதும், விருந்தினர்களை உபசரிப்பதும்தான் பெண்களுக்கான வேலைகள் என வீட்டிற்குள்ளும் அடுப்படியிலும் மாதர்களை முடக்கி வைத்து (மனு:9-27),

தனது கணவன் சூதாடியாகவோ, குடிகாரனாகவோ, நோயாளியாகவோ இருந்தாலும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டு (மனு:9-78), தனது கணவன் ஒழுக்கம் கெட்டவனாகவோ, பெண் பித்தனாகவோ, தீயொழுக்கம் உள்ளவனாகவோ இருந்தாலும், 'கணவனே கண்கண்ட தெய்வமாக' எண்ணி அவனை பூசிப்பதும் (மனு: 5-154), கணவன் சொற்படி (மனு: 9-30) வாழ்வதும்தான் பெண்ணுக்கு அழகு என உபதேசித்து (மனு:5-154),

தனது கணவன் மூலம் பிள்ளைப் பேறு இல்லை என்றால், அடுத்தவர்களோடு படுத்தும்கூட பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாதர் தம்மைக் கூட்டிக் கொடுத்து (மனு:9-58, 59),

இனவிருத்திக்கு அடிப்படையாக விளங்கும் மாதவிடாயைத் தீட்டு எனவும், முதல் மாதவிடாயின்போது அத்தீட்டைக் கழிக்க பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் மாதர் தம்மை இழிவு படுத்தி  (மனு:3-46),

மாதவிடாய் ஆனவளைத் தொட்டால் தீட்டு எனவும் (மனு:3-46, 5-85),  பிறருடன் பேசக்கூடாது (மனு:4-57), மாதவிடாய் ஆனவளுக்குப் போட்டு மீந்த உணவை உண்ணக்கூடாது (மனு: 4-208), சமைக்கக்கூடாது என மாதவிடாய் ஆனவளை வீட்டுக்கு வெளியே விரட்டி விட்டு, 

கர்ப்பமும் தீட்டுதான் என வளைகாப்பு என்ற பெயரில் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சி நடத்தி, வாரிசுகளைச் சுமக்கும் மாதரை அசிங்கப்படுத்தி (மனு:2-27),

பிள்ளை பேரும் தீட்டுதான் (மனு: 5-85) எனவும், பிள்ளை பெற்றவள் சமைத்த உணவை உண்ணக்கூடாது எனவும் தாய்மையை இழிவுபடுத்தி (மனு:4-212),

தனது இணையை இழந்த ஒரு ஆண் மறுமணம் செய்து கொள்ளலாம் (மனு: 5-169), ஆனால் தனது கணவனை இழந்த ஒரு பெண் கைம்பெண்ணாகவே அதாவது தனது இறுதி மூச்சுவரை விதவையாகவே வாழ வேண்டும் என விதி வகுத்து (மனு: 5-157, 158, 162),

பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது, அவர்கள் தங்களது இறுதி மூச்சுவரை கணவனையோ, மகனையோ நம்பித்தான் வாழவேண்டும் என அண்டிப் பிழைக்கும் நிலைக்கு மாதர்தம்மை  தள்ளி வைத்து (மனு: 5-148), 9-3)

என விதி வகுத்தவர்கள் ஆரியர்கள்‌.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்; ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!”

எனப்பாடிய 'பன்மொழி வித்தகன்' பாரதியின் கண்களுக்கு, மாதர் தம்மை இழிவு செய்யும் வேதங்களும், சாஸ்திரங்களும் தெரியாமல் போனது ஏனோ? 

மேற்கண்டவற்றை பாரதி பாடிச் சாடவில்லை என்றாலும்,

ஆண்களின் திருமண வயது 21 எனவும், பெண்களின் திருமண வயது 18 எனவும் நிர்ணயித்து 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி குழந்தைத் திருமண தடைச் சட்டம் கொண்டு வந்து மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைக்கு முடிவு கட்டினான் ஆங்கிலேயன்.

பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் முழங்கிய பெரியாரின் கோரிக்கை 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்குச் சொத்துரிமை, சட்ட வடிவம் பெற்று மாதர்தம்மை இழிவு செய்யும் மற்றொரு மடமை முடிவுக்கு வந்தது.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முன்னெடுப்பில், 1856 இல் கொண்டுவரப்பட்ட இந்து விதவைகள் மறுமணச் சட்டமும், 1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண  நிதியுதவித் திட்டமும், அரசு வேலைகளில் 30 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி அதை சட்டமாக்கி மாதர்தம்மை இழிவு செய்யும் மற்றும் சில மடமைகளுக்கு கலைஞர்தான் முடிவு கட்டினார். 

அன்று மட்டுமல்ல, இன்றும்கூட மாதர்தம்மை இழிவு செய்யும் எத்தனையோ மடமைகளைக் கொளுத்துபவர்கள் ‘வேத துவேஷிகள்தான்’ என்பதை பாரதியின் சீடர்கள் அறிவாரோ?

மாதர் தம்மை இழிவு செய்யும் வேதங்களை உயர்த்திப் பிடித்த பாரதியைப் போற்றுவதா, இல்லை மாதர்தன்மை இழிவு செய்யும் மடமைகளை வீழ்த்தும் 'வேத துவேஷிகளைப்' போற்றுவதா? 

தொடரும்

ஊரான்

Wednesday, December 17, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 12

"வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!" (501)

வேதம் ஓதுவது வீண் வேலை என்கிறார் சிவவாக்கியர். 

"கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே." (508)

மரக்கட்டையாலும், கல்லாலும், மண்ணாலும், மஞ்சளாலும், துணியாலும், சாணத்தாலும் செய்யப்படும் சிலைகளை வணங்குவதில் பயனேதும் இல்லை என்கிறார் இந்த சித்தர்.

"தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே." (509)


கோயில்களில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலி கொடுப்பது மூடநம்பிக்கை என்கிறார் சிவவாக்கியர்.

"நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே." (511)

திருநீறு, சந்தனம், பொட்டு, நாமம், பட்டை அடித்துக் கொண்டு பூஜை சடங்குகள் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளையும், பித்தலாட்டக்காரர்களையும் கடுமையாகச் சாடுகிறார் சிவவாக்கியர்.

"காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை." (516)

திருநீறு பூசி, காவியுடை அணிந்து, யோக தண்டுகளை ஏந்தி வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுக்கும் சாதுக்களை போலிகள் என்றுச் சாடுகிறார் இந்த சித்தர்.

"செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே." (518)

மரங்களை அழித்து சிலைகள் செய்து வணங்குவதை கைவிடச் சொல்கிறார் சிவவாக்கியர். 

"கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?
இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே." (520)

கல்லிலும் இரும்பிலும் தெய்வ உருவங்களைச் செதுக்கி, அவற்றை வணங்கினால் துன்பங்கள் நீங்கிவிடும் என்று நினைப்பது தவறு என்கிறார் சிவவாக்கியர்.

"சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே." (522)

சாஸ்திரங்களில் மூழ்குவோரை மூடர்கள் என்று சொல்கிறார் சிவவாக்கியர்.

வேதங்களையும், மனு உள்ளிட்ட சாஸ்திரங்களையும் எள்ளி நகையாடுவதோடு, அவை தோற்றுவித்த சாதியப் பாகுபாடுகளையும், மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் எதிர்த்து, அதாவது சனாதனத்தை எதிர்த்து சித்தர்கள் மிகக் கடுமையாகப் போராடி உள்ளனர். 

அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இன்று ஆட்டம் போடும் ஆர்.எஸ்.எஸ், பாஜக,
பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு எதிரானப் போராட்டத்திற்கு  உரம் சேர்க்கும் சித்தர்களை உயர்த்திப் பிடிப்போம். அவர்களின் பாடல்களை மக்களிடையே பரவச் செய்வோம்!

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, December 16, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 11

"இந்த ஊரில் இல்லைஎன்று எங்கு நாடி ஓடுறீர்?
அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?" (426)

ஊர் ஊராக, கோவில் கோவிலாக கடவுளைத் தேடி ஓடுவோரைக் கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர்.

"வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில்" (461)

வேதம் ஓதும் புரோகிதனும் சேரிவாழ் பறைச்சியும் சேர்ந்தால் என்ன கேடு என்று கேட்பதோடு,

"வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்கள்" (462)

பல்வேறு சாதிகளைப் பேசும் மாந்தர்களே எனக் கேள்வி எழுப்பி,

"ஓதும்நாலு வேதமும் உரைத்த
சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே." (463)

என சாதி பேதங்களைப் பேசும் வேதங்கள், சாத்திரங்கள், ஆகமங்களைச் சாடுவதுடன்,


"மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்" (சிவ.214)

மனுதர்ம சாஸ்திரத்தில் மயங்காதீர் என எச்சரித்து,

"மனு எரிக்க நாளும்நாளும் நாடுவீர்" (462)

என மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்கப் சொல்கிறார் சிவவாக்கியர்.

"குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்;
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்" (492)

வாத்து போல நீரில் மூழ்கி எழுந்தால் நீங்கள் செய்த பாவங்கள் போய்விடுமா எனக் கேட்பதோடு,

"நட்டகல்லைத் தெய்வம்என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" (494)

கற்சிலையைக் கடவுள் என நம்பி அதனிடம் முறையிடுகிறாயே, அது பேசுமாடா மடையா என்று சிலைகளை வணங்கும் பக்தர்களின் செவுட்டில் அடிக்கிறார் சிவவாக்கியர்.

சிவவாக்கியரின் அடி தொடரும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Monday, December 15, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 10

"மாதமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசுடா?." (135)

மாதவிடாய் இல்லையேல் இனவிருத்தி ஏது என்று கேட்பதோடு, பெண்களின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியைத் தீட்டாகக் கருதும் சமூகக் கண்ணோட்டத்தைச் சாடுகிறார் சிவவாக்கியர். 

சபரிமலைக்குப் பெண்கள் போகலாம் என சரியான முறையில் வழங்கப்பட்ட சபரிமலைத்  தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என அங்கே கூச்சலிடுகின்றன; ஆனால், உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என இங்கே கூப்பாடு போடுகின்றன சங்கிகள்.‌


"நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் 
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அது என்பயன்?" (140)

ஆகமங்களையும் மந்திரங்களையும் எத்தனை நாள் ஓதினாலும் அதனால் என்ன பயன் என்று கேட்கிறார் சித்தர்.

"ஈணெருமையின் கழுத்தி  இட்டபொட்ட ணங்கள்போல் மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்"....(151)

எருமையின் கழுத்தில் கட்டப்படும் பொட்டணங்கள் போல அர்த்தமற்ற சடங்குகளில் மூழ்கி, உண்மையான இறைவனை அறியாமல் அலையும் மக்களை சிவவாக்கியர் சாடுகிறார்.

"கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா" (184)

வாயால் மந்திரங்களைச் சொல்வதால் என்ன பயன் என்று கேட்கிறார் சிவவாக்கியர்

"பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்" (235)

செதுக்கப்பட்ட ஒரு கல்லை (சிலை) பழைய, புனிதப் பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தச் சிலைக்குள் இறைவனைக் காண்பதாகக் கூறி, ஏமாந்து போகிறீர்கள் என்கிறார் இந்த சித்தர்.

"ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே." (242)

தேரில் ஒரு சிலையை வைத்து, அதை வடங்களைக் கட்டி இழுப்பது அதாவது தேரோட்டம் நடத்துவது
அறியாமையுள்ள மனிதர்கள் செய்யும் வீண் சலசலப்பு என்கிறார் சிவவாக்கியர்.

"பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே" (252)

இப்படி, பேய் பிசாசுகளை நம்பி பேய் ஓட்டும் மந்திரவாதிகளிடம் ஏமாறும் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார் இந்த சித்தர்.

"கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?
நாட்டம்இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே" (422)

வேதங்களை கூடி நின்று சொல்லும் மானிடரே,  நீங்கள் வாசிக்கும் வேதத்தில் இறைவன் எங்கே இருக்கின்றான், எந்த எழுத்தில் இருக்கின்றான் என்பதைச் சொல்லமுடியுமா? என்று கேட்கிறார் சிவவாக்கியார்.

"ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தக்கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தக்கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?". (424)

வாசலில் போடும் கல்லை மிதித்துச் செல்கிறீர்கள், ஆனால் பூசை செய்யும் கல்லை மட்டும் பூ, நீர் வைத்து வணங்குகிறீர்கள். இதில் எந்தக் கல்லில் இறைவன் இருக்கிறான் என உருவ வழிபாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார் சிவவாக்கியர்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, December 14, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 9

"அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும் 
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்கனே? (75)"

ஞானம் என்பது வெறும் படிப்பிலோ, பேச்சிலோ இல்லை; அது செயலில், அனுபவத்தில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது வீண்; தயிர் உரியிலே இருக்கும்போது வெண்ணெய் தேடி வெளியில் அலைவது போலப் பயனற்றது. 


"மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில் ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!" (92)

புறத்தில் சொல்லப்படும் வெறும் மந்திர வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிறார்.

"சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்,
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்? மூவராலும் அறியொணாத முக்கணனமுதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே". (129)

கற்களைக் கடவுளாக வணங்கும் இந்தச் செயலை நினைத்து (சிவவாக்கியர்) சிரிக்கிறார்.

"காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே." (130)

காலையிலும் மாலையிலும் புனித நீராடுவது, சடங்குகளில் ஈடுபடுவது போன்ற வெளித்தோற்ற வழிபாடுகளில் ஈடுபடும் மூடர்களே (அறிவில்லாதவர்களே), எப்போதும் நீரில் கிடக்கும் தேரையைப் போல, நீராடுவதால் என்ன பயன்? 
எனக் கேட்கிறார் சிவவாக்கியர்.

"எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே." (131)

வெவ்வேறு கடவுள்கள் உண்டு என்று கூறுபவர்கள் வாய் புண்ணாகி இறந்து போவார்கள்" (அதாவது, அவர்கள் சொல்வது தவறு) என்று சிவவாக்கியர் கூறுகிறார்.

இந்தப் பாடலின் மூலம், இறைவனைப் பிரித்துப் பார்ப்பதையும், மதவாதங்களையும், பல கடவுள் கொள்கைகளையும் கண்டிக்கிறார். 

சிவவாக்கியரின் சாட்டை அடி தொடரும். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, December 12, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 8

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? (13)”

“நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர், (14)”

சிவவாக்கியர்

“சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் (18)”

“கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குலங்களும்
மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. (34)”

“செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே! (35)”

தராவிலும், அதாவது மரத்தால் செய்யப்பட்ட சிலைகளிலும்..

“பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்,
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! (36)”

“இருக்குநாலு வேதமும் எழுத்தை அறஓதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே! (37)”

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறெதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும உம்முளே! (39)

பணத்தி என்பது பார்ப்பனப் பெண்களைக் குறிக்கும்.

"ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்; 
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! (41)"

"சாதியாவது ஏதடா சலம்திரண்ட நீரெல்லாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி, காரை, கம்பி, பண்டகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? (46)

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா! உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே (47)"

மறுபிறப்பு இல்லை என்கிறார்.

இப்படி சங்கிகளை வரிசை கட்டி அடிக்கிறார் சிவவாக்கியர். 

அவரது அடி இன்னும் தொடரும்...

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்